எட்டி உதைக்குமா எட்டு மாத கரு

Tamilnadu Assembly Election News:  எட்டி உதைக்குமா எட்டு மாத கரு

லோக்சபா தேர்தல், 'சீட்' ஒதுக்கீட்டில் துண்டு விழுந்ததும், தி.மு.க., மீது கொந்தளித்தார். ஆனாலும், போராடி பெற்ற திருவள்ளூர் தொகுதியிலும், ஜெயலலிதா புண்ணியத்தால் மண் விழ, பாவம், அடுத்து என்ன என, திக்குத் தெரியாத காட்டில், கொழுகொம்பைத் தேடி புறப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.


இந்த சூழ்நிலையில், இவரை நம்மோடு வைத்திருந்தால், தலித் அல்லாத மக்களின் ஓட்டுகள் அனைத்தும் அம்போ தான் என, கணக்குப் போட்ட, தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகளை கழற்றி விடும், 'மூடு'க்கு வந்தது. அழையா விருந்தாளியாக எத்தனை நாளைக்குத் தான், அறிவாலயம் பக்கம் போய் வருவது! ஏற்கனவே, பா.ஜ.,வையும் பகைத்து, நட்டாற்றில் நின்ற,

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை சந்தித்தார் திருமாவளவன். இரண்டு ஆட்கள் இருந்தால், அரசியலில் அங்கீகாரம் கிடைக்கலாம் என கணக்குப் போட்டனர். ஏற்கனவே, இதே போன்றே, அ.தி.மு.க.,வால், துரத்தி விடப்பட்ட, இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களைத் தேடிச் சென்றனர்.


'நாம நாலு பேரும் முதல்ல, ஒண்ணா சேருவோம். பிற்பாடு, ஆட்சியில் பங்கு கோஷத்தை வைத்து ஆட்சியை பிடிப்போம்' என, துாபம் போட்டனர். இலைக்கு மயங்கும் ஆடு போல, ராமகிருஷ்ணனும், முத்தரசனும் தலையாட்ட, இருவரையும், ஒரே அமுக்காக

அமுக்கினர் வைகோவும், திருமாவளவனும். மக்கள் நல கூட்டு இயக்கம் என்ற பெயரில், முதலில், நான்கு தலைவர்களும், ஒன்றாக கரம் பற்றினர். ஒரு கட்டத்தில், இதையே கூட்டணியாக மாற்றினால் என்ன என, தலையாக இருந்து செயல்படும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சொல்ல, 'ஓ... இது கூட நல்ல யோசனை தான்' என, மற்ற, மூன்று பேரும் தலையை ஆட்டினர். கூட்டு இயக்கம், ஒரே நாளில் கூட்டணியாக மாற்றப்பட்டது. சரி, அடுத்து என்ன செய்வது என, திட்டம் போட்டனர். எத்தனை நாளைக்குத் தான் நான்கு பேரை மட்டும் வைத்து அரசியல் கச்சேரி நடத்துவது? தங்களைப் போலவே, அரசியலில் போணியாகாமல் காத்துக் கிடக்கும் கட்சிகளையும் கூட்டணிக்கு கொண்டு வருவது என முடிவெடுத்தனர்.


த.மா.கா., தலைவர் வாசனையும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தையும் மாறி மாறி சந்தித்தனர். ஆனால், அவர்கள் வேறு பக்கம் மையல் கொண்டிருக்க, இவர்கள் பேச்சு எடுபடவில்லை. எனினும், 'ஒப்புக்குச் சப்பாணியும், ஊருக்கு மாங்கொட்டையுமாய்' இவர்கள் பின்னாளில் பயன்படுவர் என்றெண்ணி, இருவரும் சந்தித்து வைக்க, மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்ற மிதப்பில் கொண்டாடியது.


தேர்தல் அறிவிப்பு வெளியாகப் போகிறது என்று தெரிந்ததும், நால்வரும் மற்றவர்களை மறந்து விட்டு, கூட்டு பிரசாரத்துக்கு கிளம்பினர். இந்த நேரத்தில் தான், ஒவ்வொரு தலைவரையும் தேடி, ஒரு கும்பல் போனது. தனித்தனியே சந்தித்து பேசி, 'நீங்க, தி.மு.க., பக்கம் வந்துடுங்க; நீங்க, அ.தி.மு.க., பக்கம் வந்துடுங்க' என ஆசை வார்த்தை காட்ட, நாலு பேரும், நாலு பக்கம் அலை பாய ஆரம்பித்தனர்.


இருந்தாலும், தங்கள் எண்ணங்களை அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்ளாமல், ரகசியமாக செயல்பட்டனர். இது, ஒவ்வொருவருக்கும் தெரிய வர, ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.


இருந்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மனதையும் உடம்பையும், 'பிட்' ஆக வைப்பதற்கு, நடை பயிற்சி, மூச்சு பயிற்சி, யோகா என, தங்களுக்கு தெரிந்த வித்தைகளை, 'அவிழ்த்து' விட்டனர். நாலு பேரும், பல இடங்களில் ஒன்றாக யோகாவும்

செய்ததாக தகவல். ஒரு கட்டத்தில், யோகாவையும் கடந்து, தங்களை தனித்

தனியாக சந்திக்கும் பலரும், ஆசை வார்த்தை காட்டி, தி.மு.க., அல்லது, அ.தி.மு.க., பக்கம் இழுத்து விட நினைக்கும் முயற்சிகள் குறித்து வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.


இந்த விஷயம் தங்களையும் தாண்டி, தங்கள் கட்சியினருக்கும் தெரிய வந்து விட்டதால், இதற்கு எப்படியாவது அணை போட நினைத்தனர். 'ஆ... ஒரு அருமையான யோசனை' என, திருமாவளவன் சொல்ல, மற்ற, மூன்று பேரும், 'என்ன அந்த யோசனை?' என, காதை நீட்டினர்.

'நாலு பேரும், காலை முதல் இரவு வரை ஒன்றாகவே இருக்கலாம். எங்கும் பிரிந்து சென்றால் தானே, பலரும் சந்தேகப்படுகின்றனர்! அப்படியே பிரிந்து செல்ல நேரிட்டாலும், எங்கு போகிறோம், எதற்காக போகிறோம் என்பதை, ஒவ்வொருவரிடமும் வெளிப்படையாக சொல்லிவிட்டுப் போகலாம்' என, யோசனையை அவிழ்த்து விட்டார் திருமாவளவன்.

'என்ன அருமையான யோசனை...' என, மற்ற மூவரும் சிலாகித்து சொல்ல, நால்வரும் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அது முதல், நால்வரும் பெரும்பாலான நேரம், இணை பிரியாமலேயே இருப்பதாக, அக்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சந்தேகத்தின் பலனாக விளையும் வார்த்தைகள் தான், அந்த தலைவர்களிடம் இருந்து அவ்வப்போது வெளிப்படுகிறது. 'என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது' என, ஒரு தலைவர் சொன்னால், இன்னொருவர், 'எட்டு மாதம் வளர்த்த கருவை, கலைக்க முடியாது' என்கிறார்.கூட்டிக் கழித்துப் பார்த்தால், எட்டு மாதக் கரு, முழுமையாய் வளர்ந்து, ஓட்டுகளாய் பிறக்க வேண்டும்; இல்லையெனில், 'எட்டி உதைச்சிருச்சே, எட்டு மாதக் கரு...' என புலம்ப

வேண்டியது தான்!- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016