கேளுங்கள் கொடுக்கப்படும் !

சமீபத்தில் வெளியான பா.ஜ., தேர்தல் அறிக்கையை பற்றி ஒரு பா.ஜ., பிரமுகரிடம் பேசும்போது, 'மீனவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது' என்று அவர் சொன்னார். மீனவர் சமூகத்தை சார்ந்த அவர், அது பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தார்.

'இதில் என்ன அதிசயம் இருக்கிறது? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தான் மீனவர்களுக்கு 10 அம்ச வாக்குறுதிகள் இருக்கின்றன' என்ற நமக்கு, ஒரு சுவாரசியமான கதையை சொன்னார்.

அவர் கூறியதாவது:

நீங்கள் காங்கிரஸ் அறிக்கையை சொன்னதால், முதலில் காங்கிரஸ். அவர்கள் அறிக்கையில் மூன்று அம்சங்கள் தான் திட்டங்கள். அதுவும், வெவ்வேறு திட்டங்களின் கீழ், மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் விஷயங்கள் தான்.

பா.ஜ.,வின் எட்டு அம்ச வாக்குறுதியில், ஒன்று மட்டும் தான் ஏற்கனவே உள்ள திட்டத்தின் விரிவாக்கம். மற்றவை புதிய திட்டங்கள். அதில், மிக முக்கியமானது, மீன்களை பதப்படுத்தி பொதிக்கும் தொழில்களை, கடலோர மாவட்டங்களில் உருவாக்குவது. இது எப்படி அறிக்கையில் வந்தது தெரியுமா?

நம் ஊரை சேர்ந்த ஒருவர்; எங்கள் சமுதாயக்காரர். மீனவர் மேம்பாட்டுக்காக சிறிய அளவில் நெடுங்காலமாக பணியாற்றி வருகிறார். மீன்களை குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு, சரியான பொது வசதியே எங்கும் இல்லாததால், வியாபாரிகளை நம்பியே மீனவர்கள் இருக்க வேண்டியுள்ளது என்பது, அவருக்கு நெருடலாகவே இருந்தது.

இது தொடர்பாக, மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி, பல அரசியல்வாதிகளை அணுகிவிட்டார். சரியான பதிலே கிடைக்கவில்லை. சிலர் சாத்தியம் இல்லை என்றனர். சிலர் பார்க்கலாம் என்றனர். ஒரு கட்டத்தில், தானே ஒரு சிறிய கிடங்கை அமைக்கலாம் என்று எண்ணி, வங்கிகளை அணுகியபோது, அதற்கு தேவையான 2 கோடி ரூபாயை அவரால் திரட்ட முடியவில்லை. அவருக்கு அலுத்துப் போய்விட்டது.

அவரது கூற்றுப்படி மீனவர்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால், வெளிநாடுகளில் இருப்பதை போல மீன் கிடங்கு, மீன் பதப்படுத்தி பொதிக்கும் தொழில், நவீன மீன் விற்பனை மையம் எல்லாம் வேண்டும். இது அரசில் யாருக்கும் தெரியாமல் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக திட்டங்கள் வைத்திருக்கின்றனர். மாநில அரசு கூட சில காலத்திற்கு நவீன மீன் அங்காடிகளை நடத்தி வந்தது. ஆனால், இதில் அனைத்து அம்சங்களும் இருந்தால் தான் மீனவர்களின் பொருளாதாரம் முற்றிலும் முன்னேறும்.

வேறு ஒன்றும் சாத்தியம் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் குளிரூட்டப்பட்ட கிடங்காவது தேவை. அதுதான் துவக்கப்புள்ளி என்பது அவரது கருத்து.

இந்த யோசனைகளோடு அனைத்து இடங்களுக்கும் சென்று அலுத்துப்போன அவர், என்னிடம் ஒருநாள் வந்தார். நான், 'நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு இ -- மெயில் அனுப்புங்கள்' என்றேன். அவருக்கு நம்பிக்கை இல்லை.

இத்தனை பேரை நேரில் சந்தித்தாகிவிட்டது, பிரதமருக்கு வெறுமனே இ- - மெயில் அனுப்பினால் என்ன நடக்கப் போகிறது என்று எண்ணினார். இருப்பினும் இ- - மெயில் போட்டார். போட்டு ஒரு வாரம், 10 நாட்களுக்கு பதில் இல்லை. இதெல்லாம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது.

திடீரென அவருக்கு டில்லியில் இருந்து அழைப்பு. 'பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்' என்று சொன்ன அவர்கள், ஒரு தேதியை குறிப்பிட்டு, பிரதமரை அப்போது வந்து சந்திக்குமாறு கூறினர். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கிறிஸ்துவரான அவர், 'என்ன ஜி! தட்டினேன் திறந்துவிட்டது!' என்று குஷியாக கூறினார்.

பிரதமரை அவர் சந்தித்தது, வெறும் 15 நிமிடங்கள் தான். அப்போது, தன் திட்டங்களை எல்லாம் எடுத்து சொன்னபோது, பிரதமர் உன்னிப்பாக கவனித்துவிட்டு, 'மீனவ சகோதரர்களுக்கு கண்டிப்பாக செய்கிறேன்' என்று மட்டும் சொல்லிவிட்டு, தன் உதவியாளரை அழைத்து, ஹிந்தியில் ஏதோ சொல்லியிருக்கிறார்.

வெளியே வந்தவுடன், அந்த உதவியாளர், 'நீங்கள் இப்போது மீன்வள துறையில் குறிப்பிட்ட அதிகாரியை சந்திக்க வேண்டும். உங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்திருக்கிறோம்' என்று சொன்னார். அந்த அதிகாரியையும் சந்தித்து, தன் கோரிக்கைகளை சொல்லிவிட்டு அவர் தமிழகம் திரும்பிவிட்டார்.

அதற்கு பின், அங்கிருந்து ஒரு தகவலும் இல்லை. முதலில் நம்பிக்கையோடு இருந்தவர், மறுபடியும் விரக்தியாகிவிட்டார். ஆனால், மூன்று வாரங்களுக்கு முன், மீண்டும் டில்லியில் இருந்து ஓர் அழைப்பு. பிரதமரின் அதே உதவியாளர் தான் பேசினார். 'உங்கள் கோரிக்கையை ஏற்று, முழு திட்டம் வடிவமைக்கப்பட்டு விட்டது. அதை, வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் சேர்க்க சொல்லிவிட்டார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களிலும், மீன் கிடங்கில் இருந்து மதிப்புக்கூட்டு தொழில் வரை, அனைத்தையும் செயல்படுத்தி விடுவோம் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார். நவீன மீன் அங்காடிகளை மட்டும் எங்களால் அமைக்க முடியாது' என்று அந்த உதவியாளர் தெரிவித்தார்.

பார்த்தீர்களா! எங்கள் பிரதமரை! தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்!

இவ்வாறு அந்த பா.ஜ., பிரமுகர் கூறி, மார்தட்டிக் கொண்டார்.

இவர் இப்படி மார்தட்டிக் கொண்டாலும், இதெல்லாம் தமிழகத்தில் ஒரு பா.ஜ., தொண்டருக்கும் தெரியாது என்பதே நிதர்சனம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)