மாணவர்களுக்காக மாறுங்கள்!

பள்ளி மாணவர்கள், 12 ஆண்டுகள் பாடங்களை மனனம் செய்வது மட்டுமல்லாமல், தத்தம் ஆர்வத்திற்கு ஏற்ப செய்முறை கற்றலையும் பெற்றால் என்னவாகும்?

பள்ளி கல்வியை முடித்து, கோடியில் ஒருவராக, திசை தெரியாது திண்டாடாமல், சுயபலம் தெரிந்தவராக, தெளிவான சிந்தனை உள்ளவராக, நாட்டுக்கு பயனுள்ளவராக அந்த மாணவர்கள் மாறுவர்.

அந்த நோக்கில் தான், கடந்த 2016ல், 'அடல் இனோவேஷன் மிஷன்' என்ற அடல் புத்தாக்க இயக்கத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதி, 'அடல் டிங்கரிங் லேப்' திட்டம். 'டிங்கரிங்' என்றால், பழுதான பொருளை சரி செய்வது என்ற பொருள் தான் வழக்கில் உள்ளது. ஆனால், இங்கு டிங்கரிங் என்பது உடைத்து கூட செய்து பார்ப்பது என்ற பொருளில் விளங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் பல்வேறு விஷயங்களை உருவாக்கியோ, உடைத்தோ பார்க்கலாம்! அதற்கு வசதியாக பள்ளிகளில் ஓர் ஆய்வகம் அமைத்து தரப்படும்.

உதாரணமாக, ஒரு மாணவர் சைக்கிளை கழற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்றால், அதற்கு தேவையான ஆயுதங்கள் அந்த ஆய்வகத்தில் இருக்கும். ஒருவருக்கு வெல்டிங் வைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றால், அதற்கான உபகரணங்கள் இருக்கும்.

இப்படி செய்து படிப்பதன் வாயிலாக, அதில் திறன் உள்ளவர்கள் முன்னுக்கு வருவர். அதே நேரம் புதுமைகள் உருவாகும். அடிமட்டத்தில் லட்சக்கணக்கான இளம் உயர்நிலைப் பள்ளி கண்டுபிடிப்பாளர்களை இத்திட்டம் உருவாக்குகிறது.

யாருக்காக?



இந்த திட்டத்தில், ஆறில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள, எந்த பள்ளி வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். 1,500 சதுர அடி இடம் வேண்டும். அங்கு இன்டர்நெட் இணைப்புள்ள கணினி வேண்டும். ஆய்வகத்தை உருவாக்க மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் கொடுக்கும். நாடு முழுதும் 10,000 பள்ளிகள் இணைந்துள்ளன.

புதுமை படைப்பதற்கான சூழல் எளிதாக கிடைக்காத பின்தங்கிய பகுதி களில் உள்ள பள்ளிகள் இதன் வாயிலாக பெரிதும் பலன் அடைந்துள்ளன. இந்த ஆய்வகங்கள், மாணவர்கள் மத்தியில் புத்தாக்க மனப்பான்மையையும், தொழில் முனையும் உணர்வையும் ஊக்குவிக்கின்றன.

தமிழகம்



இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த திட்டத்தில், தமிழகம் சரிவர பங்கெடுக்கவே இல்லை. குறைந்த அளவு பள்ளிகளில் தான் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

தேசிய அளவில் உள்ள பள்ளி மாணவர் எண்ணிக்கையில், தமிழக மாணவர்கள் 8 சதவீதம். ஆனால், இந்த திட்டத்தால், 2 சதவீத மாணவர்கள் கூட பயன் அடையவில்லை.

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் இது இல்லாததற்கு காரணம், பள்ளி கல்வி அமைச்சகத்தின் அலட்சியமும், தமிழக அரசியல் சூழலும் தான்.

மத்திய அரசின் எந்த திட்டத்தையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது அல்லது அதை முழுமையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடுவது என்ற அணுகுமுறை தான் இங்கு உள்ளது.

இந்த திட்டம் ஆந்திர அரசு பள்ளிகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தடுத்த நிலையில் கேரளாவும், உ.பி.,யும் உள்ளன.

அரவணைக்க வேண்டும்



பல அறிவியல் அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும், சிந்தனையாளர் களையும் உருவாக்கிய தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக மாநில பாடத்திட்டத்தில் எந்தவித புதுமையும் இல்லை. ஒரு சில தலைவர்களின் புகழ் பாடுவதையே பாடத்திட்டமாக வைத்ததன் விளைவாக, கடந்த அரை நுாற்றாண்டாக சிறந்த கண்டுபிடிப்பாளர்களையோ, அறிஞர்களையோ, ஆட்சியாளர்களையோ உருவாக்க முடியவில்லை.

அடல் ஆய்வகங்கள், இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரு சிறு வாய்ப்பு. இந்த ஆய்வகங்கள் அமைந்து உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல் திறன், தொலைநோக்கு திறன், புத்தாக்க திறன் ஆகியவை மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெறும் ஆய்வகம் அமைத்து தருவதோடு இந்த திட்டம் நின்று விடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு பல்வேறு கற்றல் நிகழ்ச்சிகளை நடத்த வழி செய்கிறது. உதாரணமாக, 2020 முதல், 'ஸ்மார்ட் எனர்ஜி புரோபைல் 2.0' என்ற தொடர் நிகழ்ச்சி நடக்கிறது.

அதில், பன்னாட்டு கணினி நிறுவனமான 'டெல் டெக்னாலஜிஸ்'சில் பணியாற்றுவோருடன் இணைந்து, மாணவர்கள் புதுமைகளை செய்து பார்க்கின்றனர். மாணவர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் உதவி வழங்கப்படுகிறது.

இப்படி எண்ணற்ற பலன்கள் உள்ள கல்வி சார்ந்த திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. முன்னர் குறிப்பிட்ட அடல் இனோவேஷன் மிஷன் வாயிலாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 1.20 கோடி பேர் பயன் பெறுகின்றனர். தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் பின்தங்க வேண்டும்?

தமிழக அரசியல், மாணவர்களுக்காக வாவது ஆக்கப்பூர்வமாக மாறுமா?



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)