சுயேச்சைகளால் ஜோதிமணிக்கு சிக்கல்: அடுத்தடுத்த பிரச்னைகளால் தடுமாற்றம்

அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் முதல்வருக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள், கரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கரூரில்பிரதான கட்சிகளான காங்., மற்றும் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

குறிப்பாக கட்சிக்குள்ளும், கூட்டணி கட்சிகளாலும் பல சங்கடங்களை எதிர்கொண்டு வரும் ஜோதிமணிக்கு, புதிய சிக்கலாக சுயேச்சை வேட்பாளர்கள் கிளம்பி உள்ளனர். சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சின்னங்களால் ஒரு பக்கம் பிரச்னை என்றால், ஜோதிமணி பெயரிலேயே இரு சுயேச்சைகள் களம் இறங்கி இருப்பதும், அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய, இரு தனி தொகுதிகளில் பானை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அந்த பானை சின்னம், கரூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சதீஷ் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் கரூர் தொகுதி, காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காங்., வேட்பாளராக கரூரில் போட்டியிடும் ஜோதிமணி, வி.சி., வேட்பாளர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர், பானை சின்னத்தை பிரபலப்படுத்தி வேகமாக பிரசாரம் செய்யும்போது, காங்., வேட்பாளராக கரூரில் போட்டியிடும் ஜோதிமணி, தமக்கு பாதிப்பு வருமே என்ற அச்சத்தில் உள்ளார்.

அச்சம்

அதேபோல், பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த சின்னம் கரூர் தொகுதியில், சுயேச்சை சதாசிவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ல் நடந்த லோக்சபா தேர்தல், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க., வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். இதனால், கரூரில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், தமக்கு விழ வேண்டிய ஓட்டுகள், குக்கருக்கு விழுந்து விடுமோ என்ற பீதியில் உள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாபழம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அந்த சின்னம், கரூர் தொகுதியில் ஊழல் ஒழிப்பு செயலாக்கம் அமைப்பு சார்பில் போட்டியிடும் வின்சென்ட் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பலாபழம் சின்னத்தை பிரபலப்படுத்தும்போது, கரூர் தொகுதியில் போட்டியிடும், வின்சென்ட் என்பவருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த, 2019ல் லோக்சபா தேர்தல், 2021ல் சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது, அந்த சின்னம் கரூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சக்திவேலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, கரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா, மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், தமக்கு ஓட்டுகள் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா களத்தில் உள்ளார்.

பக்க பலமாக

கரூர் காங்கிரசார் கூறுகையில், ''கடந்த தேர்தலில் ஜோதிமணிக்கு பக்க பலமாக இருந்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டவர், அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி. அவர் தற்போது ஜெயிலில் இருக்கிறார். அதுவே ஜோதிமணிக்கான பெரிய பலவீனம்.

இந்த சூழலில், சுயேச்சைகள் வேறு குழப்பம் ஏற்படுத்துவதால், அவர் நொந்து போயிருக்கிறார். கரூரைப் பொறுத்த வரை, சுயேச்சைகளால் பா.ஜ., வேட்பாளர்செந்தில்நாதன் மற்றும் நாம் தமிழர் கருப்பையாவுக்கும் சிக்கல் உள்ளது,''என்றனர்.

இதேபோன்ற குழப்பம் மற்ற தொகுதிகளிலும் பிரதான கட்சி வேட்பாளர்கள் சிலருக்கும் உள்ளது.

இதற்கிடையில், பிரபல கட்சிகளுக்கு சின்னமாக இருந்தவை, தற்போது தங்களுக்கு கிடைத்திருப்பதால், தானாகவே கூடுதல் எண்ணிக்கையில் ஓட்டுகள் விழும் என்பதால் கரூரில் போட்டியிடும் சிலசுயேச்சைகள் மகிழ்ச்சியில்உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)