கருணாநிதி காலத்தில் தொண்டர்கள் நன்றாக இருந்தார்கள்

அரசியலில் கட்சியைத் தாண்டி தனக்கென்று ஒரு 'ரசிகர்' கூட்டத்தை வைத்திருப்பவர். வெள்ளந்தி மனிதர் போல் மனதில் பட்டதை 'பட்'டென்று சொல்லி கொளுத்திப்போடும் பக்கா அரசியல்வாதி. செல்லுார் ராஜு தினமலர் தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:

இரட்டைத் தலைமை இருந்தபோது கட்சியில் எந்த பிரச்னையும் இல்லையே. ஒற்றைத் தலைமைக்கு பின் கட்சி என்ன சாதித்துவிட்டது?



இரட்டைத் தலைமை என்பது கட்சியின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை. எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தது. கட்சியில் வளர்ச்சி இல்லை. எந்த முடிவையும் உடனடியாக எடுக்க முடியவில்லை. ஒரு தலைமை இருந்தால் சரியாக இருக்கும். ஒரு உறையில் ஒரு கத்திதானே இருக்க முடியும்?

பழனிசாமிக்கு பதில் பன்னீர்செல்வத்தை பொதுச்செயலராக்கி இருக்கலாமே?



அவரது செயல்பாடுகள் ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே இருந்தன. தி.மு.க., ஒரு தீயசக்தி என்பதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூறினர். இருவரையும் தி.மு.க., ஆட்சியில் கொல்ல முயற்சி நடந்தது. இதனால் தி.மு.க.,வை வெறுப்பு உணர்வோடுதான் அ.தி.மு.க., பார்க்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம், எங்களைவிட முனைப்பாக தி.மு.க.,வை எதிர்த்திருக்க வேண்டும். சட்டசபையில் அவர் கருணாநிதியை பாராட்டி பேசியது, மகன் ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது எல்லாம் முரண்பாடாகவே இருந்தன. அவரை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. பழனிசாமியை ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள் என்றோம். அவர் கேட்கவில்லை.

பா.ஜ.,- தினகரன்-, பன்னீர்செல்வம் அணி பக்கம் முக்குலத்தோர் சாய்வது போல் தெரிகிறதே. மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தியும் ஏன் இப்படி நடக்கிறது?



வாக்காளர்கள் அ.தி.மு.க., - தி.மு.க., என்றுதான் பார்ப்பார்களே தவிர, கூட்டணியை வைத்து ஓட்டளிப்பது என்பது மாறிவிட்டது. தினகரன், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மட்டுமே அவர்களுக்கு ஓட்டளிப்பர். உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் அ.தி.மு.க.,வுக்குதான் ஓட்டளிப்பர்.

வெறும் கொங்கு மண்டல கட்சியாக அ.தி.மு.க., மாறிவிட்டதா?



அப்படி சொல்ல முடியாது. அது ஒரு மாயை. வெளியுலகத்திற்கு அப்படி தெரிகிறது. தென்மாவட்டங்களில் செயலராக இருப்பவர்கள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் எல்லோருக்கும் பழனிசாமி உரிய மரியாதை அளித்து வருகிறார்.

நீங்கள் நெற்றியில் அழகான குங்கும பொட்டு வைக்கிறீர்கள். உங்கள் கட்சி தலைவர் தன் நெற்றியில் வழக்கமாக வைத்துவந்த திருநீரை அழித்துவிட்டாரே, ஏன்?

அவர் கோவிலுக்கு போனால் திருநீறு பூசுவார். வழக்கமாக திருப்பதி செல்கிறார். நாங்கள் தி.மு.க.,வினர் போல் அல்ல. வெளிப்படையானவர்கள். தி.மு.க., தலைமை வர்ணாஸ்ரமத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறது. ஆனால் முதல்வரின் மனைவி துர்கா கோவில்களுக்கு செல்வதை தடுக்க முடியுமா? தன் குடும்பத்தையே திருத்தாதவர்கள் நாட்டை எப்படி திருத்துவர்? கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நெற்றியில் குங்குமம் வைத்ததை ரத்தமா என கேட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

தி.மு.க., தீய சக்தியா அல்லது பா.ஜ., தீய சக்தியா?



எங்கள் பார்வையில் தி.மு.க.,தான் தீயசக்தி. அது மக்கள் விரோத கட்சி. குடும்ப நலனை மட்டுமே பார்க்கும். கருணாநிதி காலத்தில் தொண்டர்கள் நன்றாக இருந்தனர். ஸ்டாலின் காலத்தில் பொதுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டம் என தொண்டர்களுக்கு மீன்களுக்கு பொரி போடுவது போல் கொடுக்கின்றனர்.

இந்தாண்டு ஜெயலலிதா பிறந்தநாளில் விமரிசையான நிகழ்ச்சிகள் ஏதும் தென்படவில்லையே?



நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எப்போதுமே சிறப்பாகத்தான் கொண்டாடி வருகிறோம். தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் கொண்டாடுவது அ.தி.மு.க.,வில் மட்டும்தான். எம்.ஜி.ஆர்., இறந்து 37 ஆண்டுகளாகி விட்டன. அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என தைரியமாக நாங்கள் சொல்கிறோம். ஆனால் கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என தி.மு.க.,வால் கூற முடியவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என எதுவுமே நடக்கவில்லையே? இதற்கு யார் காரணம். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்?



இதுபோன்ற திட்டங்களுக்கு அடிப்படை சாலை, தொழில் வளர்ச்சி முக்கியம். அ.தி.மு.க.,வில் தடையற்ற மின்சாரம் வழங்கினோம். மின்கட்டணம் உயர்த்தவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பூர்வாங்க பணிகளை செய்தோம். பழனிசாமி ஆட்சியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 7 கி.மீ., நத்தம் பறக்கும் பாலம் என பல வளர்ச்சிகளை செய்தோம்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், ஜல்லிக்கட்டு மைதானத்தை கொண்டு வந்து பெருமை பேசுகின்றனர்.

கடந்த 2016ல் பிரசாரத்தில் 18 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம் போல் மதுரையை மாற்றுவேன் என்றீர்கள். 2021 வரை 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தீர்கள். என்ன ஆனது அந்த வாக்குறுதி?



எடுத்த உடனே சிட்னியாக மாறாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும். அதற்காகத்தான் மதுரையில் வைகை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. எங்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால் சாத்தியமாகி இருக்கும்.

சிட்னி பார்த்திருக்கிறீர்களா?



நான் லண்டன் தேம்ஸ் நதிக்கரைக்கு சென்றுள்ளேன். சிட்னி செல்லவில்லை. அது எப்படி உள்ளது என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தீர்கள். இப்போது அந்த துறைக்கு அமைச்சராக உள்ள பெரியகருப்பன் எப்படி செயல்படுகிறார்? கடந்த 3 ஆண்டுகளில் அந்த துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதா?



வளர்ச்சி அடையவே இல்லை. அரசு நிதியுதவி செய்யவில்லை. வங்கிகளை ஆன்லைன் வர்த்தக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். நிறைய டிபாசிட் கிடைத்தது. அதை வைத்து அதிகளவில் பயிர்க்கடன் கொடுத்தோம்.

இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் நடத்தினேன். 28 முறை தேசிய விருதும், இரண்டு முறை ஜனாதிபதி விருதும் பெற்றேன். மூன்று ஆண்டுகளில் இவர்கள் எத்தனை விருதுகள் வாங்கினர்? வங்கி கள் லாபத்தில் இயங்கின. இப்போது எவை லாபத்தில் இயங்குகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நகைக்கடன், மகளிர்குழு கடன் தள்ளுபடி என்று தி.மு.க., சொன்னதை முழுமையாக நிறைவேற்றவில்லை. எங்கள் காலம் கூட்டுறவுத் துறையின் பொற்காலமாக இருந்தது.

அமைச்சர் தியாகராஜனிடம் இருந்து முக்கியமான நிதித்துறை பறிக்கப்பட்டு அதிக முக்கியத்துவம் இல்லாத துறை கொடுக்கப்பட்டு உள்ளதே. அதை மதுரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?



ஏதோ ஒரு மர்மம் இருக்கு. நிதி ஆளுமை திறன்கொண்ட அவர், டேப் 'லீக்' விவகாரத்தில் மாற்றப்பட்டார். பி.டி.ராஜன் குடும்பத்திற்காக பேருக்கு அவரை அமைச்சராக வைத்துள்ளனர்.

நிதித்துறை சிறப்பாக இருந்ததுபோல் தகவல் தொழில்நுட்பத் துறையும் சிறப்பாக மாற வேண்டும் என்பதற்காகதான் தியாகராஜனை துறை மாற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே?



அப்படியானால் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் சிறப்பாக செயல்படவில்லையா? அப்படி செயல்படாதவரை எப்படி பால் வளத்துறைக்கு முதல்வர் நியமித்தார்? முதல்வர் கூறுவது எல்லாம் சப்பைக்கட்டு.மீண்டும் சொல்கிறேன்... இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கு.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)