வைத்திலிங்கத்துக்கு எம்.பி., பதவி ஏன்? - இருவர் அணியில் தொடர்ந்து செயல்பட அனுமதி

Tamilnadu Assembly Election News:  வைத்திலிங்கத்துக்கு எம்.பி., பதவி ஏன்? - இருவர் அணியில் தொடர்ந்து செயல்பட அனுமதி

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த, முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி இருப்பது, அ.தி.மு.க., பிரமுகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனதும், அவரை தமிழக அரசின் வீட்டு வசதித் துறை அமைச்சராக நியமித்தார் ஜெயலலிதா.

அதன் பின், கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கான முக்கியத்துவம் கூடிக் கொண்டே போனது. கட்சியை நிர்வகிப்பதற்காக, நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதனுக்கு அடுத்த நிலையில், வைத்திலிங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வழக்கில் சிக்கி பதவி இழந்த போது, அந்த துறையையும் கூடுதலாக கவனிக்கும் பொறுப்பும் வைத்திலிங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டது.

வீட்டு வசதித் துறை, நகர்புற மேம்பாடு, வேளாண் துறை என, அதி முக்கியத்துவம் வாய்ந்த மூன்று துறைகளை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டதும், ஆட்சியிலும், கட்சியிலும் அவருக்கும் கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி கட்டத்தில், ஐவர் அணியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர், கட்சித் தலைமையின் அதிருப்திக்கு ஆளாகிவிட, அவர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின், அவர்கள் மூவரும் வரிசையாக, வெளியே வந்து முதல்வரை சந்தித்தாலும், முன்பு போல, கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில், கட்சியை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட் ஐவர் அணி, வைத்திலிங்கம், எடப்பாடி

பழனிச்சாமி என, இருவர் அணியாக

சுருங்கியது.

அதிலும், வைத்திலிங்கத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்படுத்திக் கொடுக்க, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சியை 'டீல்' செய்யும் பொறுப்பு என, எல்லாவற்றையும் ஏற்றார் வைத்திலிங்கம்.

ஜெயலலிதாவுடன் முறுக்கிக் கொண்டு, கூட்டணியை விட்டு

வெளியேறிய சரத்குமார், கூட்டணியில் இருந்தால்தான், தென் மாவட்டங்களில் கட்சி வெற்றி பெறும் என, ஜெயலலிதாவுக்கு, உளவுத் துறை ரிப்போர்ட்

கொடுத்தது. உடனே, சரத்குமாரை அ.தி.மு.க., பக்கம் திரும்பவும் அழைத்து வருமாறு, வைத்திலிங்கத்துக்கு

உத்தரவிட்டார் ஜெயலலிதா.

அதைத் தொடர்ந்து, சரத்குமாரைத் தேடிப் போன வைத்திலிங்கம், அவரது அலுவலகத்திலேயே பல மணி நேரம் காத்திருந்து, சரத்குமாரின் வருத்தங்களையெல்லாம் போக்கி, அவரை மீண்டும் அ.தி.மு.க., பக்கம் கொண்டு வந்தார். புதுச்சேரியில் கட்சி தனித்து போட்டியிடலாம் என, ஜெயலலிதாவை முடிவெடுக்க வைத்ததும் வைத்திலிங்கம்தான்.

இப்படி கட்சிக்காக, தேர்தல் நேரத்தில் பாடுபட்ட வைத்திலிங்கம், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததும், ஜெயலலிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால், அவருக்கு முக்கியப் பதவி ஒன்றை கொடுக்க அவர்

திட்டமிட்டார்.

அதனால், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வைத்திலிங்கத்துக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பாக, ராஜ்யசபா எம்.பி., பொறுப்பு வழங்கி இருக்கிறார். அவரை, கட்சியின் இருவர் அணியிலும் தொடர்ந்து செயல்பட்டு, கட்சி நிர்வாகங்களையும் கவனிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில்

கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016