இரு கட்சி அரசியலை உறுதி செய்த ம.ந.கூ.,

Tamilnadu Assembly Election News: இரு கட்சி அரசியலை உறுதி செய்த ம.ந.கூ.,


'பணநாயகத்தால், அ.தி.மு.க.,வும் - தி.மு.க.,வும் தொகுதிகளை பங்கு போட்டுக் கொண்டன' என்ற, ஒற்றை வரியில், தேர்தல் தோல்விக்கான காரணத்தை, தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சொல்வதை ஏற்க முடியாமல், அக்கூட்டணியினரே முணுமுணுக்கத் துவங்கி விட்டனர்.
'மாற்று அரசியல் என்ற கோஷத்தை, ஊடகங்கள் மழுங்கடித்து விட்டன' என, தோல்விக்கு மற்றொரு சப்பைக் கட்டு கட்ட, கூட்டணிக் கட்சி தலைவர்கள் முயற்சிக்கின்றனர் என்ற பேச்சும், மக்கள் நலக் கூட்டணியில் அதிகமாக கேட்கிறது.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் டிபாசிட் இழந்து விட்டார். கூட்டணியின் வேட்பாளர்கள், பெரும்பாலான இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓட்டுகளை வாங்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மட்டுமே, வெற்றியின் விளிம்புக்கு சென்று, 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.இந்நிலையில், தோல்விக்கான காரணங்களாக, மக்கள் நலக் கூட்டணியினர் முன்னிறுத்தும் காரணங்கள்:* அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்று என துவங்கிய மக்கள் நலக் கூட்டணி, அதன் பாதையில் முழுமையாக பயணிக்கவில்லை* அ.தி.மு.க.,வுக்கும், தங்களுக்கும் தான் நேரடி போட்டி என சொன்னவர்கள், அதற்கு ஏற்றாற் போல் பிரசாரத்தை செய்யவில்லை* மாறாக, தி.மு.க.,வை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர்
* தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, தனிப்பட்ட முறையில் செய்த தாக்குதலும், ஜாதி ரீதியாக, தி.மு.க., மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளும், பிரசாரத்தை திசை திருப்பி விட்டது
* கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் வரை சென்று விட்டு, மனு செய்யாமல் திரும்பியதோடு, அதற்காக அவர் முன் வைத்த காரணங்களை, கம்யூனிஸ்டுகளே விமர்சித்தனர்
* தேர்தல் களத்தில், கடைசி ஒரு வாரம், மக்கள் நலக் கூட்டணிக் கட்சி தலைவர்கள் இல்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்தும், அக்கட்சியின் நட்சத்திர பிரசாரகருமான பிரேமலதாவும், விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர் பேட்டையிலேயே முகாமிட்டு விட்டனர்
* இதுபோன்ற அணுகுமுறைகள், வாக்காளர் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏற்பட்ட கணிசமான ஆதரவை, தேர்தலின் போது குறைத்து விட்டது. நடுநிலையாளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் நம்பிக்கையை பெற, மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை
* அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு கூட்டணி ஆட்சி தான் மாற்று என, ஒன்றரை ஆண்டுகளாக பிரசாரம் செய்து, இறுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரு கட்சிகளின் பிடியில் தான், தமிழகம் உள்ளது என்பதை, கூட்டணிக் கட்சித் தலைவர்களே உறுதி செய்து விட்டனர் இவ்வாறு தோல்விக்கான காரணங்களை, மக்கள் நலக் கூட்டணியினர் அடுக்குகின்றனர்.இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக கூடி, தோல்விக்கான காரணங்களை ஆராயத் துவங்கி விட்டனர். இந்த ஆய்வுக்குப் பின், வேறு பல காரணங்களையும் அவர்கள்
வெளியிடக்கூடும். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016