தமிழக அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு... வாய்ப்பு!:தி.மு.க.,வை சமாளிக்க பலமான சபாநாயகர் யார்?

Tamilnadu Assembly Election News: தமிழக அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு... வாய்ப்பு!:தி.மு.க.,வை சமாளிக்க பலமான சபாநாயகர் யார்?

அ.தி.மு.க., அமைச்சர்களில் பலருக்கு தேர்தலில் 'சீட்' கொடுக்காததாலும், சிலர் தோல்வி அடைந்துள்ளதாலும் புதுமுகங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 89 எம்.எல்.ஏ.,க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க.,வை சட்டசபையில் சமாளிக்க பலமான சபாநாயகரை தேர்வு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அதையடுத்து யார் அந்த சபாநாயகர் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் 19 அமைச்சர்கள் போட்டியிட்டனர். அவர்களில் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், மோகன், வளர்மதி, கோகுலஇந்திரா ஆகியோர் தோல்வியை தழுவினர்; மற்றவர்கள் வெற்றி பெற்றனர்; அவர்கள் மீண்டும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த முறை அமைச்சராக இருந்த பலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். தேர்தலில் போட்டியிட்ட ஐந்து பேர் தோல்வியை தழுவினர். அதனால் தற்போது புது முகங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களும்
கடந்த முறை அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும் இப்போது அமைச்சர் பதவியை எதிர் நோக்கி உள்ளனர்.

வரும் 23ம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன் கவர்னரிடம் அமைச்சர்கள் பெயர் பட்டியல் வழங்கப்படும். அந்த பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்காக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

முதல்வரின் செயலர்கள் முதல்வரின் தோழி சசிகலாவின்உறவினர்களை பிடித்து சிலர் அமைச்சர் பதவி பெற முயற்சித்து வருகின்றனர். இன்று பவுர்ணமி தினம் என்பதால் அமைச்சர் கள் பட்டியலை கவர்னரிடம் ஜெயலலிதா வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது போல் பலமான சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க.,வினரிடம் காணப்படுகிறது. கடந்த, 2011ல் அ.தி.மு.க., ஆட்சி பொறுப் பேற்ற போது ஜெயக்குமார் சபாநாயகராக பொறுப்பேற்றார். அதன் பின் அவர்

நீக்கப்பட்டு தனபால் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவரால் சமாளிக்க முடிந்தது.

இம்முறை தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, தி.மு.க., கூட்டணி 98 இடங்களை பிடித்துள்ளது. அவர்களை சமாளிக்கும் வகையில் திறமையான நபர் சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளார்.

அதற்கு முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக அ.தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.

அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், வீரமணி, காமராஜ், விஜயபாஸ்கர், செல்லுார் ராஜு, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, சண்முகநாதன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம் மற்றும் ஓ.எஸ்.மணியன், நடராஜ், பாண்டியராஜன், பெஞ்சமின், நரசிம்மன், துாசி மோகன், குமரகுரு, சித்ரா, சரோஜா, விஜயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், இன்பதுரை, நிலோபர் கபில் போன்றவர்களுக்கும், அமைச்சர் பதவி கிடைக்கலாம் என, தகவல் பரவி வருகிறது.

சட்டசபை கட்சி தலைவராக ஜெ., தேர்வு: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்; கூட்டத்தில், ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.அதேபோல், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சீனிவேல் உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. கூட்டம், 5:40 மணிக்கு நிறைவு பெற்றது.

அதில், சட்டசபை, அ.தி.மு.க., தலைவராக, ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டம் முடிந்த பிறகு, எம்.எல்.ஏ.,க்கள் ஒப்புதல் கடிதத்தை, போயஸ் கார்டன் சென்று, ஜெயலலிதாவிடம் வழங்கினர்.நேற்று, நரசிம்மர் ஜெயந்தி. நரசிம்மர் பிறந்த நேரமான, மாலை, 5:00 மணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016