மாநில கட்சி அந்தஸ்தும் போனது ; தே.மு.தி.க., எதிர்காலம் என்னவாகும் ?

Tamilnadu Assembly Election News: மாநில கட்சி அந்தஸ்தும் போனது ; தே.மு.தி.க., எதிர்காலம் என்னவாகும் ?

சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று சக்தி என்று கூறி வந்த விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிபோனது.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவித்த நாள் முதல் அவர் யாருடன் கூட்டணி சேருவார் என்ற பரவலான பேச்சுக்கு அவர் சினிமா கிளைமாக்ஸ் போல் எந்த பிடியும் கொடுக்காமல் சஸ்பென்ஸ் வைத்து மவுனம் காத்தார். தனித்து போட்டி என்றும் பின்னர் பழமாக திமுக எனும் பாலில் விழும் என்றும் நிலவிய சூழலில் அவர் மதிமுக, இடதுசாரி, விடுதலைசிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி என அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. மேலும் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விஜயகாந்துக்கு பல ஆயிரம் கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்ற வைகோவின் பேச்சும் மக்களை சிந்திக்க தூண்டி விட்டது.

கூடுதலாக இவரது கட்சியில் இருந்து சந்திரகுமார் தலைமையிலான ஒரு அணி அதிருப்தியுடன் வெளியேறியது. இதுவே விஜயகாந்த் மீது இருந்த இமேஜை மேலும் சரித்தது. அதற்கும் மேலாக விஜயகாந்த் பொதுக்கூட்ட மேடையில் நடந்து கொண்ட விதம் , அவரது புரியாத பேச்சு அவரை மேலும் பாதாளத்தில் தள்ளியது என்பது உண்மை. விஜயகாந்தை பற்றி திமுகவோ, அதிமுகவோ ஒரு வார்த்தை கூட பிரசாரத்தில் விமர்சிக்கவில்லை. காரணம் மக்களே அவரை ஆளுக்கொரு விஷயத்தை சொல்லி கேலிபொருளாக பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது.இருண்ட காலமாகத்தான் இருக்கும்: இது போன்ற பல்வேறு காரணத்தினால் விஜயகாந்துக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சியான தேமுதிக இந்த முறை பூஜ்யம் என்ற பெயரை எடுத்து காலி டப்பாவாகியிருக்கிறது. மாநில கட்சிக்கான சதவீத ஓட்டுக்கள் இப்போது இல்லாமல் போனதால் தேமுதிக மாநில கட்சி அந்தஸதையும் இழந்து நிற்கிறது. இதனால் இந்தகட்சி தொண்டர்கள் உற்சாகமிழந்து கட்சி பணியில் எந்த அளவுக்கு ஈடுபடுவர் ? இன்னும் விஜயகாந்த் மீதான மதிப்பை எந்த அளவுக்கு குறைத்து கொள்வர் என்பது போக போக தெரியும். மொத்தத்தில் விஜயகாந்த்துக்கு இன்னும் 5 ஆண்டுகள் இருண்ட காலமாகத்தான் இருக்கும் என்பது உண்மையே !மாநில கட்சி என்ற அந்தஸ்துக்கு 6 சதவீத ஓட்டுக்கள் வேண்டும். கடந்த முறை 5 சதவீத ஓட்டுக்கள் பெற்ற நிலையில் 29 எம்எல்ஏ.,க்கள் இருந்ததால் தேர்தல் கமிஷன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த முறை 2 சதவீத ஓட்டுக்களே இந்த கட்சி பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்துள்ளது.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016