தமிழகத்தை உலுக்கிய கலவரங்கள்

தமிழக மக்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டு, சலித்திருந்த நிலையில்மாற்று கட்சியை மனம் தேடத் துவங்கியது. ஆனால், இன்று வரை, மற்ற எந்தகட்சியுமே வலுவான மாற்று கட்சியாக உருவெடுக்கவில்லை.


இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்து தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளதா என்றால் ஓரளவுக்கு ஆமாம் என்றே சொல்ல லாம். கல்வியறிவு, சாலை வசதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள் என தனித்தனியே ஆராய்ந்தாலும், மற்ற மாநிலங்களை விட நம் தமிழகம் சொர்க்கபூமியாகத் தான் திகழ்கிறது. ஆனால், அதையும் தாண்டி பொருளாதார வளர்ச்சி, மக்களின் ஆரோக்கியம் பிளஸ் நிம்மதியான வாழ்க்கைக்கு, இந்த இரண்டு கட்சிகளும் அடித்தளம் அமைத்துள்ளனவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.அதற்குக் காரணம், ஜாதிகளின் பிடியில் சிக்கி, கலவரம் என்ற பூதம் நம்மை ஆட்டுவிப்பது தான்.

இதற்கு துாபம் போட்டவை, அரசியல் கட்சிகள் தான். எந்த கட்சி கலவரங்களில் ஈடுபட்டாலும், அந்தந்த கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சியே, சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும்.இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி யின் போது நடந்த கலவரங்கள் பற்றிய பின்னோட்டத்தை படித்தால், எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்ற தெளிவு கிடைக்கும்.


1991 அ.தி.மு.க.,

கடந்த, 1991, அக்., 25ல், சென்னை கால்நடை அறிவியல் கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சுரேஷ் என்பவரை, பேருந்து நடத்துனர் தரக்குறைவாக பேசியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 12க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க, பெரும் கலவரம் வெடித்தது.

போலீசார் தடியடியில், 40 மாணவர்கள் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.


1992 அ.தி.மு.க.,

கடந்த, 1992, பிப்., 18ல், கும்பகோணம் மகாமக பெரு விழாவில் கலந்து கொள்வதற்காக, தன் தோழி சசிகலாவுடன் சென்றார், முதல்வர் ஜெயலலிதா. இருவரும் குளத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அறையில் புனித நீராடினர். குளத்தின் கொள்ளளவு, 40 ஆயிரம் பேர் என கணக்கிடப்பட்டு இருந்தாலும், பன்மடங்கு கூட்டம் கூடியது. அப்போது, 'பாங்கூர் தர்மசாலா' கட்டட சுவர் இடிந்து விழுந்த பீதியில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பியோட முயற்சித்தனர். இதில்மிதிபட்டு, 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


கடந்த, 1992, மே 30, ஜூன் 2, இடைப்பட்ட நாட்களில், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்ற பெண்ணை போலீசார், லாக் - அப்பில் அடைத்து, கணவர் நந்தகோபால் முன்னிலையில்கற்பழித்ததாகவும், பின், நந்தகோபாலை அடித்தே

கொன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரம் இல்லை என்றாலும் பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி பழனியப்பன் கமிஷன் விசாரணை நடத்தியது.


கடந்த, 1992, ஜூன் 20ல், தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, 55 வன பாதுகாவலர்கள், 108 போலீசார் மற்றும் ஆறு வருவாய் துறை அதிகாரிகள், அந்த கிராமத்தில் உள்ள தலித்துகளின் வீடுகளை சூறையாடினர். 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான பொருட்களை நாசப்படுத்தினர். 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தனி நீதிமன்றம், 269 பேர் குற்ற வாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அப்போது, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட, 54 பேர் இறந்துபோயிருந்தனர்.


கடந்த, 1992, நவ., 8ல் வந்தவாசியில், கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, தலித்துகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பெரும் கலவரம் மூண்டது. தலித்துகள், 73 பேர் படுகாயமடைந்தனர். 29 பேருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டு போலீஸ்காரர்களும் தாக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு போடப்பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி வரதன் கமிஷன் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.


விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டியில், விவசாய சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், எத்திராஜ் மற்றும் இருதய ஜோசப் ஆகியோர் இறந்தனர். போலீஸ்காரர்

ராமலிங்கம் என்பவரும் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியன் கமிஷன் விசாரணை நடத்தி, விவசாய

சங்கத்தினர் மீது தவறு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. எத்திராஜ் குடும்பத்திற்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.


1993 அ.தி.மு.க.,

கடந்த, 1993 ஏப்., 29ல், செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்டம் மாமண்டூரில், போலீசார் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் மோகன் என்ற போலீஸ்காரர் பலியானார். விசாரணையில், யாழ்ப்பாணம், வல்வெட்டி துறையைச் சேர்ந்த மூன்று பேர், தஞ்சாவூர் மாவட்டம், புளிக்காடு என்ற இடத்தில் ஆயுதங்களுடன் சிக்கினர்.


சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை, செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு போலீசார் வேனில் அழைத்து சென்ற போது, மாமண்டூரில் ஓட்டலில் சாப்பிட அழைத்து சென்றனர். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், இரவு, 7:40 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்மநாபன் கமிஷன் விசாரணை நடத்தியது.


கடந்த, 1993 ஆக., 8ல், சென்னை சிந்தாரிப்பேட்டையில் இருந்த, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில், முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். இதில், 11 பேர் இறந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.


1994 அ.தி.மு.க.,

கடந்த, 1994ல், சந்தன கடத்தல்காரன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர், இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்ததாக கலவரம் வெடித்தது.

இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்தது. போலீசார் சில இடங்களில் தடியடி நடத்தினர். ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.


கடந்த, 1994, அக்., 10ல், காஞ்சிபுரம் மாவட்டத் தில், தலித் சமூகத்தினர் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தாமஸ், ஏழுமலை ஆகியோர் இறந்தனர்.

இதனால், மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கலவரம் மூளும் அபாயமும் நிலவியது. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி கமிஷன் விசாரணை நடத்தியது.


கடந்த, 1994, நவ., 18ல், ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ராக்கம்மாள், முருகலட்சுமி ஆகியோரை, போலீஸ்காரர்கள் நாகசுந்தரம், ஆறுமுகம், குமரப்பா ஆகியோர் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் காட்டுத் தீ போல் மாநிலம் முழுவதும் பரவ, போராட்டங்கள் வெடித்தன.

சில இடங்களில் கலவரம் வெடித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சவுந்தர பாண்டியன் தலைமையில், கமிஷன் அமைக்கப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட போலீசார் மீது, கிரிமினில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்தது.


கடந்த, 1994ல், சென்னையைச் சேர்ந்த முரளி என்ற வழக்கறிஞரை, தேவேந்திரன் என்ற போலீஸ்காரர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி வரதன் கமிஷன் விசாரணை நடத்தியது.



1995 அ.தி.மு.க.,


கடந்த, 1995, ஆக., 31ல், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், தலித், தேவர் சமூகத்தினருக்கு இடையே மூன்று மாத காலம் தொடர்ந்து கலவரம் நடந்தது. யார் மீது எப்போது ஈட்டி வந்து பாயும் என்ற நிலை. ஒருவரையொருவர் வெட்டி சாய்த்தனர். 75க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.


குடிசைகள் எரிக்கப்பட்டன. 20 கிராமங்களில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். சிறு பாலங்கள் உடைக்கப்பட்டு, மின் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.


பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கொடியங்குளம் கிராமத்திற்குள் புகுந்த போலீசார் கோர தாண்டவம் ஆடினர். இதில், கிராமமே சூறையாடப்பட்டது.இந்த கலவரங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கோமதி நாயகம் கமிஷன் விசாரணை நடத்தியது.


1997 தி.மு.க.,

கடந்த, 1997, ஜன., 7ல் கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகத்தில், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.,வாக இருந்த, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். அன்றைய தினம், பஞ்சாயத்து ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் சென்று விட்டனர். இதையடுத்து, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் இறங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.

இதனால், அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீஸ் எஸ்.ஐ., நளினி என்பவர், பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் கமிஷன் விசாரணை நடத்தியது.


1997 தி.மு.க.,

கடந்த, 1997, ஏப்., 16ல், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில், வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் செயல்பட துவங்கியது. இதற்கு, தேவர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகாசி - ஈஞ்சர் சந்திப்பு அருகே, தேவர் சமூகத்தினர் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பெரும் கலவரம் வெடித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மின் கம்பங்கள் சாய்க்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தன்ராஜ் கமிஷன் விசாரணை நடத்தியது. இந்த கலவரத்தின் விளைவாக, போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.


1997 தி.மு.க.,

கடந்த, 1997, மே 5ல், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தடையை மீறி சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.அதை கண்டித்து, நெல்லை மாவட்டம், துறையூரில் பிலிப்ஸ், தங்கையா, மாசிலாமணி ஆகியோர் கண்டன போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் பிலிப்ஸ் கொல்லப்பட்டார். இதனால், பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் எரிப்பு, பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்து, கலவரமாக மாறியது. ஓய்வு பெற்ற நீதிபதி காமாட்சி கமிஷன் விசாரணை நடத்தியது.


1997 தி.மு.க.,

கடந்த, 1997, ஜூன் 7ல், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, யாகசாலையில் தீப்பிடித்து கூரை கொளுந்துவிட்டு எரிந்தது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி, 48 பேர் பலியாகினர். 200 பேர் படுகாயமடைந்தனர்.


1997 தி.மு.க.,

கடந்த, 1997, ஜூன் 19ல், நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார், போக்குவரத்து கழக டிப்போவில் நுழைந்து, ஊழியர்கள் மீது கடுமையாக தடியடி நடத்தினர். இதனால், மாநிலம் முழுவதும், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதிக்க, தமிழகமே ஸ்தம்பித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி காதர் கமிஷன் விசாரித்தது.


1997 தி.மு.க.,

கடந்த, 1997 நவ., 29ம் தேதி கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ், வெட்டி கொல்லப்பட்டார். இதற்கு அல்-உம்மா அமைப்பினர்

தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு மாதங்களில், நடந்த கலவரத்தில், 17 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில், 1998 பிப்., 14ல் கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 19 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில், 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோவையில் அன்று தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டது தெரிய வந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் கமிஷன் விசாரணை நடத்தியது.


1998 தி.மு.க.,

கடந்த, 1998, அக்., 30ல், பசும்பொன் தேவர் குருபூஜைக்கு காரில் சென்று திரும்பிய, அய்யண்ணன் அம்பலம் உள்ளிட்ட இரண்டு பேர், சாலை விபத்தில் பலியாகினர். 'இது விபத்து அல்ல; மண் லாரியை ஏற்றி, அவர்கள் கொல்லப்பட்டனர். சதி இருக்கிறது' என, தேவர் சமூகத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் கலவரம் வெடித்தது.

போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிஷன் விசாரித்தது.


1998 தி.மு.க.,

கடந்த, 1998ல், சென்னை அமைந்தகரையை சேர்ந்த, ரவி மனைவி சித்ரா என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் சித்ரவதை

செய்ததாக குற்றச்சாடு எழுந்தது. இதனால், சென்னையில் பதற்றம் ஏற்பட்டு, கடும் மோதல் ஏற்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து கமிஷன் விசாரித்தது.


1998 தி.மு.க.,

கடந்த, 1998ல், கன்னியாகுமரி மாவட்டம், கல்லாம் பொத்தை என்ற கிராமத்தில், முஸ்லிம்கள் மற்றும் மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக் கொண்டனர். இதையடுத்து, அங்கு ஒரு குண்டுவெடிப்பு நிகழ, இரு சமூகத்தினரும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிஷன் விசாரித்தது.


1999 தி.மு.க.,

கடந்த, 1999, ஜூலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தினக்கூலி, 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என,

போராடினர். பெண்கள் உட்பட, 198 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து, ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லையில் பேரணி நடந்தது. இதில், கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த, 17 பேர், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் கமிஷன் விசாரணை நடத்தியது.


2000 தி.மு.க.,

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் ஊழல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, தனி நீதிமன்றம், 2000ம் ஆண்டு பிப்., 2ம் தேதி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் போராட்டங்களில் இறங்கினர்.

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில், கோவை வேளாண் கல்லுாரி மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சை, அ.தி.மு.க.,வினர் தீ வைத்து எரித்தனர். இதில், ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூன்று மாணவியர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அ.தி.மு.க.,வினர் மூன்று பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஆயுள்

தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.


2001 அ.தி.மு.க.,

கடந்த, 2001, ஆக., 12ல், சென்னையில் கருணாநிதி கைதை கண்டித்து, தி.மு.க.,வினர் பேரணி நடத்தினர். இந்த பேரணி, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகத்தை கடந்தபோது பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அதில் நான்கு பேர் இறந்தனர்; பத்திரிகையாளர் பலரும் தாக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவத்சலம் கமிஷன் விசாரணை நடத்தியது.


2001 அ.தி.மு.க.,

கடந்த, 2001, ஆக., 6ல், ராமேஸ்வரம் அடுத்த ஏர்வாடியில், மனநல காப்பகத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்த, 28 மன நோயாளிகள், அங்கு திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியாகினர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமதாஸ் கமிஷன், இதை விசாரித்தது.


2002 அ.தி.மு.க.,

கடந்த, 2002, ஆக., 29ல், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பெரும் கலவரம் வெடித்து. கவுன்சிலர்கள் ஒருவரை மற்றவர் தாக்கி கொண்டனர். மேயர் பதவியில் இருந்த ஸ்டாலினை நீக்கிவிட்டு, துணை மேயராக கராத்தே தியாகராஜனை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த கலவரம் நடந்தது. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஓய்வு பெற்ற நீதிபதி நடராஜன் கமிஷன் விசாரித்தது.


கடந்த, 2002, செப்., 9ல், மதுரை மேலுாரில், கல்லுாரிகளை பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பெரியளவில் போராட்டம் நடத்தினர். கலவரமும் வெடித்தது. போலீசார் கடுமையாக தடியடி நடத்தினர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியன் கமிஷன் விசாரித்தது.


2004 அ.தி.மு.க.,

கடந்த, 2004, ஜூலை, 16ல், கும்பகோணம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகி பலியாகினர். 14 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் விசாரணை நடத்தியது.


2005 அ.தி.மு.க.,

கடந்த, 2005, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் மழை, வெள்ளம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து, டிச., 18ல், வெள்ள நிவாரணம், தலா, 2,000 ரூபாய்க்காக அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது.

அப்போது, சென்னை எம்.ஜி.ஆர்., நகர், அரசு பள்ளியில், அதிகாலையில் டோக்கன் வாங்க சென்றவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், 42 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் கமிஷன் விசாரணை நடத்தியது. முன்னதாக, நவ., 6ல், சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் அரசு கல்லுாரியில், வெள்ள நிவாரண தொகை வாங்க சென்ற, ஆறு பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.


2007 தி.மு.க.,

கடந்த, 2007, மே 9ல், தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், மதுரையில், தினகரன் நாளிதழ்

அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தினர். இதில், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் பலியாகினர்.


கடந்த, 2007, ஆக., 14ல், தென்காசியில், இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்கு இடையே பெரும் கலவரம்

வெடித்தது. இதில், ஆறு பேர் இறந்தனர். அதில் மூன்று பேர் சகோதரர்கள். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.


2009 தி.மு.க.,

கடந்த, 2009, பிப்., 19ல் சுப்பிரமணியன் சாமி மீது உயர் நீதிமன்ற வளாகத்தில் முட்டை வீசப்பட்டது தொடர்பாக, சில வக்கீல்களை கைது செய்ய போலீசார் சென்றனர். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸ் தடியடியில் வக்கீல்கள், நீதிபதிகள் காயமடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் கமிஷன் விசாரணை நடத்தியது.


2011 தி.மு.க.,

கடந்த, 2011, மார்ச் 16ல், 2ஜி ஊழில் வழக்கில் தொடர்பு இருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான சாதிக் பாஷாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாக்குமூலமும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அவர் மர்மமான முறையில் இறந்தார்.


2011 அ.தி.மு.க.,

கடந்த, 2011, நவ., 11ல், தலித் சமூகத்தைச் சேர்ந்த, பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அப்போது, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜான் பாண்டியன், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது, சிறுவனின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்றார். அவரை போலீசார் தடுத்தனர். இதனால், போலீஸ் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர்

பலியாகினர். இதையடுத்து நடந்த கலவரம் பெரும் முயற்சிக்குப் பின் அடக்கப்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் விசாரித்தது.


2012 அ.தி.மு.க.,

தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் இளவசரனும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த திவ்யாவும் காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, 2012 அக்டோபர், 10ம் தேதி திருப்பதியில் காதல் திருமணம் செய்து கொண்டது.


இதற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் நவம்பர் 7ம் தேதி கலவரம் வெடித்தது. இதில், தலித்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 297 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.


தொடர் சம்பவங்களால், இளவரசனை விட்டு திவ்யா பிரிந்து செல்ல, இளவரன் 2013, ஜூலை 4ம் தேதி ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தமிழகத்தையே

உலுக்கிய இந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிஷன் விசாரணை நடத்தியது.


2012 அ.தி.மு.க.,

கடந்த, 2012ல், நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக் கூடாது என, பெரும் போராட்டம் நடந்தது. கடலோர பகுதி மீனவர்களை ஒன்று திரட்டி, உதயகுமார் என்பவர் போராட்டம் நடத்தினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கடந்த, 2012, செப்., 5ல், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் மிகப் பெரிய தீ விபத்து

நிகழ்ந்தது. இதில், 40 பேர் பலியாகினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.


2013 அ.தி.மு.க.,

கடந்த, 2013, ஜூலை 1ல், வேலுாரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஜூலை 30ல், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேசையும் பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றனர். இதுதொடர்பாக, போலீஸ்

பக்ருதீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


2013 அ.தி.மு.க.,

கடந்த, 2013, அக்., 11ல், நெல்லை மாவட்டம், அய்யாபுரம் என்ற கிராமத்தில், தலித் இனத்தவர்களை முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யும் முயற்சி நடந்தது. இதனால் கலவரம் வெடித்தது. ஐந்து பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர்.


2014 அ.தி.மு.க.,

கடந்த, 2014, ஜூன் 28ல், சென்னை, குன்றத்துார் சாலையில், மவுலிவாக்கம் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று கட்டப்பட்டு வந்த, 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதில், 61 அப்பாவி தொழிலாளிகள் சிக்கி பலியாகினர்.


2015 அ.தி.மு.க.,

கடந்த, 2015, ஜூலையில், வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, பள்ளிகொண்டா கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ராவை, ஆம்பூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் அழைத்து சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபரை போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஆம்பூரில் பெரும் கலவரம் வெடித்தது. போலீஸ் மீது கல்வீச்சு, பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பொதுமக்கள், போலீசார் மீது கடும் தாக்குதல் நடத்தினர். பெண் போலீசார் பலர், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். வழக்கமான, கமிஷன் இத்யாதிகள், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால், 144 தடை சட்டம், பல மாதங்களுக்கு ஆம்பூரில் பிறப்பிக்கப்பட்டது.


2015 அ.தி.மு.க.,

கடந்த, 2015, டிச., 1ல், சென்னையில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை

முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்த பாதிப்பில் சிக்கி, 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், சென்னை நகரை விட்டு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்கள் சொத்துகள் சேதம் அடைந்தன.


2016 அ.தி.மு.க.,

உடுமலைப்பேட்டையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த கவுசல்யாவை, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் காதல் திருமணம் செய்தார். இதையடுத்து, 2016, மார்ச், 14ல்,

கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து, சங்கரை கொடூரமாக கொன்றதாக போலீசார் கைது செய்தனர். கவுசல்யா தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார்.



கமிஷன் என்பது சம்பிரதாயமே!

'எவிடென்ஸ்' தனியார் நிறுவன செயல் இயக்குனர் கதிர் கூறியதாவது:கடந்த, 1991-2015 வரை, அ.தி.மு.க., ஆட்சி யில், 21 கலவரங்களும், தி.மு.க., ஆட்சியில் 16 கலவரங்களும் ஏற்பட்டுள்ளன. கலவரங்கள் ஏற்படும்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிஷன்கள் அமைக்கப்படுகிறது. இந்த கமிஷன்களை உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படி கலவரம் நடந்ததும் நீதி விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் கமிஷன் விசாரணை அனைத்துமே, பிரச்னையை அப்போதைக்கு அமுக்கிப் போடுவதற்காகவே அமைக்கப்படுகிறது. பிரச்னை எழுந்ததும், முதல்வராக இருப்பவரின் எண்ணம் என்னவாக இருக்கிறதோ, அதையே அந்த கமிஷன், தன் விசாரணைக்குப் பின், அறிக்கையில் தெரிவிக்கிறது. என்னதான் கமிஷன் போட்டு விசாரணை நடத்தி, அறிக்கைகள் பெறப்பட்டாலும், அந்த கமிஷன் அறிக்கை மீது அரசு தரப்பு உரிய நடவடிக்கையும் எடுக்காததால், கமிஷன் என்பது வெறும் சம்பிரதாயமாக மட்டுமே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016