அது ஒரு நிலா காலம்...!

Tamilnadu Assembly Election News: அது ஒரு நிலா காலம்...!

டி.என்.சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்களில் முக்கியமானது, தேர்தல் பிரசாரத்தை இரவு, 10:00 மணிக்கு மேல் செய்யக் கூடாது என்பது.


ஏனென்றால், இரவு பிரசாரத்தை அனுமதிக்கும் போது, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், கட்சி ரீதியான மோதல்கள், உள்ளடங்கிய கிராமங்களில் ஏற்படும் ஜாதி ரீதியான மோதல்கள் போன்றவற்றை கண்காணிப்பது கடினம். அதுபோக, வாக்காளர்களுக்கு ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அசவுகர்யம், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு அதீத சத்தத்தால் ஏற்படும் தொல்லை, இவற்றைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.


அதற்கு முன், தேர்தல் காலங்களில் விடிய விடிய மேடை பிரசாரம் நடக்கும். அண்ணாதுரை, எம்.ஜி. ஆர்., கருணாநிதி போன்றவர்கள், காலை, 6:00 மணி வரை கூட பிரசாரம் செய்வர். பிரசாரம் முடிந்த பின், ஆளுங்கட்சியாய் இருந்தால், சர்க்யூட் ஹவுஸிலோ அல்லது டிராவலர்ஸ் பங்களாவிலோ தங்குவர்.


எதிர்க்கட்சியாய் இருந்தால், கட்சி பிரமுகர் வீட்டிலோ அல்லது லாட்ஜிலோ தங்குவர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, அன்று மாலை பேசப் போகும் இடங்களில், எது பற்றி பேச வேண்டும் என்று கட்சியினருடன் விவாதித்து விட்டு, மற்ற ஏரியா நிலவரங்களை விசாரித்து, தேவையான

உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மதியம் அந்த ஏரியாவில் புகழ் பெற்றிருக்கும் அசைவ சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, ஒரு துாக்கம் போடுவர்.மாலை, 6:00 மணிக்கு மேல், 'டச்சப்' செய்து கொண்டு பிரசாரத்துக்கு கிளம்புவர். தொடர்ந்து காலை வரை பிரசாரம் இருக்கும். இது, தேர்தல் காலம் முழுவதும் மாறாமல் நடக்கும்.


அன்று பேசப்போகும் பிரசார இடங்களுக்குஉத்தேசமாக ஒரு நேரம் குறித்து, அதை விளம்பரப்படுத்தி இருப்பர். மாலை, 6:00 மணி என்றால் நிச்சயம், 10:00 மணிக்காவது அந்த நட்சத்திர பேச்சாளர் வந்துவிடுவார்.அதேபோல, இரவு, 9:00 மணி என்று குறிப்பிட்டிருப்பர். அந்த இடத்திற்கு வரும்போது அதிகாலை, 2:00 மணியாவது ஆகியிருக்கும்.


இப்போது போல பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காலம். ஆண்களுக்கு பிரசார கூட்டம் கேட்பது, ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்த காலம் அது. பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு சக நண்பர்களுடன் வந்து தற்காலிக கடைகளில் பொரி, வறுத்த கடலை போன்ற அயிட்டங்களை சாப்பிட்டு கொண்டு, சுக்கு மல்லி காபி குடித்துக் கொண்டு, பீடி, சிகரெட் புகைத்துக் கொண்டு வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பர்.போலீசாரின், 'வாக்கி டாக்கி' தான் தலைவர்கள் எந்த பாயின்டில் உள்ளனர் என்று தெரிந்து கொள்ள உதவும் சாதனம்.


குறிப்பாக, 1984க்குப் பிறகு, 1990 வரை ஜெயலலிதா, காளிமுத்து, வைகோ, டி.ராஜேந்தர் போன்ற மேல் மட்ட தலைவர்களுக்கும், வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நெல்லை பாலாஜி போன்ற விரசம் கலந்து பேசும் பேச்சாளர்களுக்கும் இதுபோல ஒரு, 'டிமாண்ட்' இருந்தது. இவர்கள் பேசுவதாக இருந்தால் தன்னிச்சையாகவே கூட்டம் கூடிவிடும்.


கிராமங்களில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் முக்கிய பிரசார இடங்களுக்கு சென்று தலைவர்கள் பேச்சைக் கேட்பர். அவர்கள் இரவில் திரும்ப வாகன வசதி இல்லாமல், அந்த திடலிலேயே படுத்துக் கொள்வதும் உண்டு.


எம்.ஜி.ஆர்., இந்த மாதிரி தங்குபவர்களுக்கு ஏரியா பொறுப்பாளர்கள் மூலம் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து விட்டுப் போவார். பெரும்பாலும் வெண்பொங்கல். அதைச் சாப்பிடும் வேற்று கட்சிக்காரர்கள் கூட, எம்.ஜி.ஆர்., மீது அபிமானம் கொண்டு விடுவர்.


டி.என். சேஷன் இரவு 10:00 மணிக்கு மேல் பிரசாரம் நீட்டிப்பதை நிறுத்திய பின், மதியம், 3:00 மணியளவில் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. தொலைக்காட்சி முதலான பொழுது போக்குகளும், 90ல் கிடைக்க ஆரம்பித்த உடன், பிரசாரம் பொழுது போக்கு அம்சத்தில் இருந்து விடுபட்டது.

கட்சியினர் மட்டுமே பிரசார இடங்களுக்கு வர ஆரம்பித்தனர். இதனால், கூட்டம் சேர்க்க வேண்டுமானால் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வரவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டு விட்டது.

- டுவிட்டரில், 'டீக்கடை' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கடிதம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016