விலை பொருளாக மாறும் விஜயகாந்த் - நிதர்சனம் பேசும் சுதர்சன நாச்சியப்பன்.

Tamilnadu Assembly Election News: விலை பொருளாக மாறும் விஜயகாந்த் - நிதர்சனம் பேசும் சுதர்சன நாச்சியப்பன்.

''காங்கிரசில் இருந்து வாசன் பிரிந்து சென்றதன் விளைவை, இன்று அனுபவிக்கிறார்,'' என, காங்., மாநிலங்களவை கொறடாவும், பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவருமான, சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


காங்., - தி.மு.க., கூட்டணிக்கு, வரவேற்பு எப்படி இருக்கிறது? தமிழக மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த மாற்றத்தை தி.மு.க.,வால் மட்டுமே தர முடியும் என, காங்., கருதுகிறது. அதற்காக, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்கிறது. இக்கூட்டணி, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும்.


பிரசாரத்திற்கு நீங்கள் செல்லுமிடங்களில்,மக்கள் என்ன நினைக்கின்றனர்?

தமிழகத்தில் செயல்படக் கூடிய, மக்களிடம் நேரடியாக தொடர்புள்ள ஒரு அரசு அமைய வேண்டும் என்ற எண்ணம், மக்களிடம் நிலவுகிறது. இதை, நான் செல்லுமிடங்களில் உணர முடிகிறது. மக்களை சந்திக்காத முதல்வராக, ஜெ., இருந்தார். அந்தளவுக்கு, மக்களிடம் நல்ல அரசு குறித்த தேடல் இருக்கிறது.


'மீண்டும் வாய்ப்பு தாருங்கள்' என முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தில் பேசி வருகிறாரே? ஐந்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, எந்தவொரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. ஆனால், ஆறு மாதங்களாக சட்டசபை தேர்தலை கணக்கிட்டு, சில காரியங்களை செய்திருக்கிறது.

தரமற்ற இலவச பொருட்களை வழங்கியது. எல்லாவற்றையும் செய்ததை போல காட்டிக் கொண்டது. ஆனால், அ.தி.மு.க.,வின் இந்த நாடகத்தை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.


'காங்., - தி.மு.க., ஊழல் கூட்டணி' என, பா.ஜ., - அ.தி.மு.க., குற்றம் சாட்டுகின்றனரே?

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, அம்மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், 3,200 கோடி ரூபாய் தவறாக செலவழிக்கப்பட்டதாக, அக்கவுன்டன்ட் ஜெனரல் சட்ட

சபையில் அறிக்கை தாக்கல் செய்தார். இதுபோல, பா.ஜ., தலைவர்கள் மீது, பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை மறைத்து விட்டு, காங்., ஆட்சி காலத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் நடந்ததாக, ஒரு மாயத் தோற்றத்தை, பா.ஜ.,வினர் ஏற்படுத்துகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம். காங்., தலைவர்கள்

மீது, எந்த நீதிமன்றத்திலாவது வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? தண்டனை பெற்றுள்ளார்களா?


'2 ஜி' ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் காங்., ஆட்சி காலத்தில் வெளியானதே?

காங்., ஆட்சி காலத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என தகவல்கள் வெளியாகின. இந்த ஊழல்களில், காங்கிரசார் மீது, ஏதாவது ஒரு வழக்கு போட முடிந்ததா? காங்., தலைவர்கள் மீது, ஊழல் புகார் இல்லாததால், வழக்கு போட முடியவில்லை. பா.ஜ.,வின் யோக்கியதையை, மக்களும் தெரிந்து வைத்துள்ளனர்.

செயல்படும் அரசைத் தான், மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்தளவுக்கு முந்தைய காங்., ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள், அகல ரயில் பாதைகள், கிராமப்புற சாலை மேம்பாடு, மகாத்மா காந்தி தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கட்டாய கல்வி சட்டம், நில ஆர்ஜித சட்டம் போன்றவை மூலம், மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.


பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு என்பது உள்ளிட்ட பல சலுகைகள், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 'உணவு பாதுகாப்புச் சட்டத்தில்' ஆறு மாத குழந்தை முதல் ஆறு வயதினர் வரை, காலை உணவு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என உள்ளது. அதுபோல, பிளஸ் 2 வரை சத்துணவு கொடுக்க வேண்டும் என உள்ளது. காங்., கொண்டு வந்ததைத் தான், அ.தி.மு.க., அறிவித்திருக்கிறது.


பா.ஜ.,வின் இரண்டு ஆண்டு கால ஆட்சி, பல சாதனைகள் படைத்துள்ளதாக

கூறுகின்றனரே?

பா.ஜ., இரண்டு ஆண்டு கால ஆட்சியில் உருப்படியான ஒரு திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, உலகத்தை சுற்றி வந்ததை தவிர, வேறு எதையும் செய்யவில்லை.

காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான், பிரதமர், தற்போது மீண்டும் துவக்கி வைக்கிறார். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில், 11 கி.மீ., துாரத்திற்கு, காங்., ஆட்சியில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை, பிரதமர் மோடி திறந்தார். அங்கு காங்., ஆட்சியில் கட்டப்பட்ட அணையை திறந்தார்.

விவசாயிகள், நகர்ப்புறங்களில் எந்த நேரத்திலும் பயன்படுத்தும் தொலைபேசி வசதிக்காக ஜி.பி.எஸ்., போன்றவை, காங்., ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டன. வெளிநாடுகளுக்கு, பிரதமர் சுற்று பயணம் சென்றாரே? ஒரு ரூபாய் முதலீடு கூட, இந்தியாவிற்கு வரவில்லை.


தொழிற்சாலைகள் வராததால், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். பல படித்த இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்ற வண்ணம் உள்ளனர். இதை, பா.ஜ., அரசு மறுக்குமா?

பா.ஜ.,வின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையே?

திட்டங்களை செயல்படுத்தினால் தானே, ஊழல் நடந்ததா எனக் கூற முடியும். எந்த

திட்டங்களையும், பா.ஜ., அரசு செயல்படுத்தவில்லை.


'காங்., ஆட்சி காலத்தில், 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; பா.ஜ., ஆட்சியில் ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியிருக்கிறாரே?

மீனவர்களை மீட்டு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், பா.ஜ., ஆட்சியில், தமிழக மீனவர்களின், மீன் பிடிக்கும் உரிமையை மீட்டு கொண்டு வரவில்லையே. இதனால், அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.

காங்., ஆட்சியில், தமிழக, இலங்கை மீனவர்கள் மத்தியில் பேச்சு நடத்தி, ஒரு நாள் விட்டு ஒரு நாள், கடலில் மீன் பிடித்து கொள்ளலாம் என்ற உரிமையை பெற்று கொடுக்கப்பட்டது.


பா.ஜ., ஆட்சியில், எல்லை தாண்டி செல்லக் கூடாது எனக் கூறி, மீன் பிடிக்கும் உரிமையை விட்டு கொடுத்துள்ளனர். இந்தளவு தைரியம், இலங்கை மீனவர்களுக்கு எங்கிருந்து வந்தது? மேலும், காங்., ஆட்சியில், 5,000 கோடி ரூபாயில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றை, பா.ஜ., அரசு

நிறுத்தி விட்டது. 2009க்கு பிறகு, காங்., ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

நடந்திருக்கிறதா?


சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுகின்றதே?

அ.தி.மு.க., பணத்தை நம்பி தான், இந்த தேர்தலை சந்திக்கிறது.


தேர்தல் கமிஷன் நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?

தேர்தல் கமிஷன் ஒன்றிரண்டு ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணி மாற்றம் செய்து விடுவதால் மட்டுமே, தவறுகள் நின்று விடாது. சில கீழ்மட்ட அதிகாரிகள், அ.தி.மு.க.,வினரின் தவறுகளுக்கு உடந்தையாக உள்ளனர்.


தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும், ஊழல் மலிந்துள்ளதாக, காங்., துணை தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளாரே?

உண்மையை தானே கூறியிருக்கிறார். அ.தி.மு.க., நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவர் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க., தேர்தலை

சந்திக்கிறது. இதை தான், மக்களிடம் நாங்கள் விளக்கி வருகிறோம். பட்டா மாறுதலுக்கு, வி.ஏ.ஓ., 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக செய்தி வெளியாகிறது. இதே நிலை தான் மற்ற துறைகளிலும் நிலவுகிறது.


காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் அதிகம் இருக்கிறதே?

எந்த கட்சியில் தான் கோஷ்டி பூசல்கள் இல்லை. கோஷ்டி பூசல் என்றால், கருத்து வேறுபாடு என அர்த்தம். ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடு இருப்பது சகஜம் தானே. கடைசியில், கட்சி மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ, அதை ஏற்று செயல்படுவது தான் முறை. அதை தான் காங்., நிர்வாகிகள் செய்கின்றனர். கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவறு என கூற முடியாது. காங்.,ஐ பொறுத்த வரை, எல்லா தலைவர்களுமே ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.

தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி குறித்து கருத்து என்ன?

கூட்டணி ஆட்சி என்ற புதிய சிந்தனையுடன், அந்த கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ஆனால், அந்த கூட்டணியிலுள்ள, அனைத்து கட்சிகளுக்குமே, கூட்டணி ஆட்சி ஏற்படுத்துமளவுக்கு,

வலு இல்லை என்பதே உண்மை. தேர்தலில், அந்த கூட்டணி, ஏழு சதவீத ஓட்டுகளை பெற முடியும் என, சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதனால், அக்கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் செயல்பாடுகள், சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளனவே?

கடந்த ஆறு மாதங்களாக, பா.ஜ., அணிக்கு போகிறார்; தி.மு.க., அணிக்கு போகிறார் என விஜயகாந்த் பற்றிய செய்திகள் தினமும் வெளியான வண்ணம் இருந்தன. இதன்மூலம் தன்னையும், கட்சியையும் ஒரு விலை பொருளாக அவர் மாற்றி விட்டார். காய்கறி சந்தையில் தேங்காய், உருளைக் கிழங்கிற்கு என்ன விலை என்பது போல, விலை பொருளாக மாற்றி கொண்டார். இதனால், மக்கள் நம்பிக்கையை, அவர் இழந்து விட்டார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து, வைகோ பின்வாங்கியிருக்கிறாரே?

வைகோ நிலையான கொள்கை இல்லாதவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படக்கூடியவர். உணர்ச்சிவசப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார். அவரது முடிவு, வரும் தேர்தலில், தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணிக்கு, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், அவர் தான் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்.


தி.மு.க., - காங்., கூட்டணி, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

தி.மு.க., ஆட்சி அமைக்குமளவுக்கு, பெரும்பாலான தொகுதிகளில், இக்கூட்டணி வெற்றி பெறும்.


தி.மு.க., வெற்றி பெற்றால் அமைச்சரவையில் காங்., பங்கு கேட்குமா?

அமைச்சரவையில் காங்., பங்கு கேட்காது. தி.மு.க., ஆட்சி செய்யட்டும் என கூறி விடுவோம். 2006 - 11ல் கூட, தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதும் கூட, காங்., அமைச்சரவையில் பங்கு கேட்கவில்லையே. தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு கட்சி ஆட்சி என்ற பாரம்பரியம் உள்ளது.


'காமராஜர் ஆட்சி' என, காங்கிரசார் கூறுவது பெயரளவுக்கு தானா?

காமராஜர் ஆட்சி என்பது, தொல்காப்பியம் போல ஒரு இலக்கணம். சுயநலத்திற்காக

ஆட்சியை பயன்படுத்தக் கூடாது. எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கு ஏற்ப, தமிழகத்தில்

கட்சிகளின் ஆட்சி அமைய வேண்டும் என, காங்., விரும்புகிறது. அதே நேரத்தில், காங்.,க்கு, எப்போது அந்த சந்தர்ப்பம், வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது காமராஜர் ஆட்சியை செயல்படுத்துவோம். காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற வாசன்,


தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளாரே?

வாசனுக்கு, காங்., தலைவர் சோனியா மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அமைச்சரவையில் கேட்ட துறையை ஒதுக்கினார். கட்சியிலும் கூட, முக்கிய பொறுப்புகளை வழங்கினார். ஆனால், தகுந்த காரணங்களை கூட தெரிவிக்காமல், அவர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார். அதன் விளைவை, அவர் இன்று சந்திக்கிறார்.


வாசனின் எதிர்காலம் என்னவாகும்?

காங்., கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள், வலு பெற்றதாக வரலாறு இல்லை.

வாசன் மீண்டும் வந்தால் காங்.,கில் சேர்த்து கொள்ளப்படுவாரா?

காங்., தலைவர் சோனியா தான், முடிவு செய்வார்.


நீங்கள் தலைவராக இருக்கும் பார்லிமென்ட் நிலைக் குழு செயல்பாடுகள் என்ன?

மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை உயர் நீதிமன்றம் சென்னை, உயர் நீதிமன்ற கிளை மதுரை என பெயர் மாற்ற, நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது. உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், தமிழில் வாதாட உரிமை வழங்கலாம் எனவும், சிபாரிசு செய்துள்ளது. நீதித் துறையில் ஐம்பது சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமிக்க வலியுறுத்தி வருகிறோம்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பிடித்தது?

தமிழ் பாரம்பரியத்தை காக்க, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.


பயோ - டேட்டா

பெயர் : இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்

வயது : 66

கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.எல்., பி.எச்.டி.,

கட்சி : காங்கிரஸ்

பொறுப்பு : மாநிலங்களவை கொறடா

சொந்த ஊர் : ஏரியூர், சிவகங்கை


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016