சுங்க கட்டணம் முறைப்படுத்தப்படுமா?

Tamilnadu Assembly Election News: சுங்க கட்டணம் முறைப்படுத்தப்படுமா?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நேரடியாக செல்லும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையில், பெரும் பங்கு வகிப்பது, நமது தமிழக லாரிகள் தான்.


தமிழகத்தில், 8.25 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் இருந்து துவங்கும், ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளில் சிலவற்றை தவிர்த்து, ஏனைய சாலைகளில் (லாரி பே) லாரிகள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படவில்லை.


இதனால், நீண்ட தொலைதுாரங்களில் இருந்து, மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி வரும் வாகன ஓட்டுனர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள தக்க இடமின்றி, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதால், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் பின்புறம் மோதி பயங்கர விபத்துகள் ஏற்பட்டு, பல உயிர்கள் பலியாவது தொடர்கிறது.


ஆகவே நெடுஞ்சாலைகளில், லாரி நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் பெருமளவு நடக்கும் திருட்டை ஒழிக்க வேண்டும். ஓட்டுனரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூபாயை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல், இன்று வரை ஒழிக்கப்படவில்லை.


நெடுஞ்சாலைகளில் உள்ள ரோந்து போலீஸ் படையினர் செயல்பாடு, பெயரளவில் தான் உள்ளது. குற்றங்கள் குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும், சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை, 10 சதவீதத்திற்கு மேல் கூடியபடி இருக்கிறது.


ஆனால், வாகன எண்ணிக்கை கூடும்போது, சுங்கக் கட்டணத்தை கூடுதலாக வாங்கக்கூடாது என்ற விதி மதிக்கப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சுங்கச்சாவடிகளில் வசூலாகும் கட்டண விவரங்களை, பொது அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற போக்குவரத்து விதியும் எந்த சுங்கச்சாவடியிலும் கடைபிடிக்கப்படவில்லை.


அனைத்து சுங்கச்சாவடிகளையும் தனியார் நிறுவனங்களே நிர்வாகம் செய்கின்றன. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தான், மேற்கண்ட நிறுவனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுங்கக் கட்டணங்கள் உயர்வதாலும், டீசல் விலையில் நிரந்தரமற்ற நிலை நிலவுவதாலும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மூன்றாம் நபர் காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும், 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து கொண்டு போவதாலும், லாரி தொழில் தற்சமயம் சற்று மந்த நிலையில் உள்ளது.


புதுடில்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பாக, சுங்கக் கட்டணத்திற்கு நிரந்தர தீர்வாக, ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமாக செலுத்தி, நாடு முழுவதும் வாகனங்களை இயக்கிக் கொள்ளும் யோசனை கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட யோசனையை, பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.


தேசிய அளவில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக வேலைவாய்ப்பை அள்ளித்தரும் துறை தரைவழி போக்குவரத்து துறை. தற்சமயம்கூட லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறையால், 10 சதவீதம் லாரிகள் இயங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து ஆகியவை சீராக செயல்பட, தரைவழி போக்குவரத்து மிகவும் அவசியமானது.


சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு, விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வந்து அன்றாடம் சேர்ப்பதில், லாரிகளின் சேவை, முக்கிய பங்கு வகிக்கிறது.

கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விளையும் பல்லாரி, சிறு வெங்காயம் போன்ற பொருட்கள், நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில், தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.


அறுவடை நாட்களில், இன்னும் அதிக லாரிகளில் வெங்காயம் வரும். அதிக லாரிகளில் சரக்கு வரும்போது, வெங்காய விலை சரிவை சந்திக்கும். அதுபோல் சரக்கு ஏற்ற லாரிகளின் எண்ணிக்கை பற்றாக்குறை ஏற்பட்டால், சரக்குகளின் விலையும் ஏறுமுகமாக இருக்கும். ஆகவே, விலைவாசியை சமநிலைப்படுத்தும் பொருளாதாரம் சார்ந்த நிலையில் தான், சரக்கு போக்குவரத்து உள்ளது. லாரி தொழிலை, 60 சதவீதத்தினர் படிப்பறிவு இல்லாதவர்கள் தான் நடத்துகின்றனர்.


நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக இருப்பதால், பல லட்சம் குடும்பங்கள், இத்தொழிலை நம்பி வாழ்கின்றன. லாரி தொழில் நலிவடையாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள், குறைந்தபட்ச வாடகை, ஒரு டன்னுக்கு ஒரு கி.மீ.,க்கு இவ்வளவு தான் என்று நிர்ணயம் செய்தால் தான், லாரி தொழிலை காப்பாற்ற முடியும்.

சி. சாத்தையா

துணைத் தலைவர் மாநில லாரி

உரிமையாளர்கள் சம்மேளனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016