ம.ந.கூ., விசும்பல்கள் சில நாட்கள் மட்டுமே!

Tamilnadu Assembly Election News: ம.ந.கூ., விசும்பல்கள் சில நாட்கள் மட்டுமே!

தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணியை மக்கள் நிராகரித்து விட்டனர். தி.மு.க.,வை ஏகோபித்த ஆதரவுடன் தேர்வு செய்யவும் தயாராகி விட்டனர். இந்த ஆதங்கத்தில், பொருளாளர் ஸ்டாலின் மீது, சேற்றை வாரி இறைக்கும் வேலையில், மக்கள் நலக் கூட்டணியினர் ஈடுபடுகின்றனர்.


தமிழகத்தில் மாற்று ஒன்று இல்லை. வாக்காளர் மத்தியில், அந்த சிந்தனையும் இல்லை என்பதால் தான், தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி பற்றி, தி.மு.க., பேசுவதே இல்லை. இந்த யதார்த்தம் புரியாமல், பேசுபவர்களிடம் வாதிப்பதில் பலன் ஏதுமில்லை.
ஸ்டாலின் மேற்கொண்ட, 'நமக்கு நாமே பயணம்' மூலம், நமக்கு இப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்ற எண்ணம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்தப் பயணத்தின் போது, பல லட்சம் மக்களை, பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தார்; உரையாடினார். அவர்களின் குறைகளை, மனக்குமுறலை கேட்டறிந்தார்.


அப்படி நடந்த உரையாடலின்போது, பல்வேறு கருத்துக்களை மக்கள் முன் வைத்தனர். அதில் ஒன்று தான், தி.மு.க.,வினர் செயல்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்ட ஓரிரு கருத்துகள். மக்களின் பார்வையில் வெளிப்பட்ட கருத்துக்கு, ஸ்டாலின் பதில் சொன்னார். அந்த பதில் தான், 'நாங்கள் தவறு செய்திருந்தால், திருத்திக் கொள்கிறோம். இனிமேல், அப்படிப்பட்ட தவறுகள் நடக்காமலும் செயல்படுவோம்' என்பது.மக்களின் ஒரு பகுதியினர், ஒரு குறையை சுட்டிக்காட்டும் போது, தவறை ஒப்புக் கொள்ளாமல், பூசிமெழுகும் வேலையை, ஸ்டாலின் செய்யவில்லை.


'அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவோம்' எனக் கூறுவது, ஒரு தலைவனின் பாங்கு. அந்த பண்பின் அடிப்படையில், ஸ்டாலின் தன் கருத்தை தெரிவிக்கிறார். இதில், தவறு ஏதும் இல்லை. இந்த உயர்ந்த பண்பை ஏற்றுக் கொள்ளாமல், லாவணி பாடுவது முறையற்றது.


இந்தியாவில் உள்ள கட்சிகளில், அடிப்படைக் கட்டமைப்பை வலுவாக வைத்திருக்கும் கட்சி, தி.மு.க., இங்கு, தனிமனித துதிபாடல் எப்போதும் இல்லை; இனியும் இருக்காது.


இந்நிலையில், ஸ்டாலின் என்ற தனி நபரை பிரதானப்படுத்தி, ஒரு ஆட்சியை கட்டமைக்க தி.மு.க., முயற்சிக்கிறது. அதன் எதிரொலி தான், 'நமக்கு நாமே' பயணமும், அதையொட்டி தயார் செய்யப்பட்ட, தி.மு.க., தேர்தல் அறிக்கையும் என்பது, வீண் பேச்சு. இதில், துளியும் உண்மைஇல்லை.


ஸ்டாலினை பிரதானப்படுத்துகின்றனர் என, இப்போது மட்டும் அல்ல; இதற்கு முன்பும் விமர்சித்தனர். அதற்கெல்லாம், தன் செயல்பாட்டின் மூலம், தி.மு.க., உரிய பதிலை சொல்லிக் கொண்டே வருகிறது; அது, இனியும் தொடரும்.


அ.தி.மு.க., மீது ஊழல் குற்றச்சாட்டும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டும் உள்ளது. அதை நேரடியாக சொல்ல முடியாத, மக்கள் நலக் கூட்டணியினர், துணைக்கு தி.மு.க.,வையும் அழைத்துக் கொண்டு பேசுகின்றனர்.


ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஒரு சட்டசபை தொகுதியில் உள்ள, 80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் போய் சேர வேண்டும் என்ற, அ.தி.மு.க., தலைமையின் உத்தரவின் படி, ஒரு மாதத்துக்கு முன்பே, தொகுதிக்கு, 7.5 கோடி ரூபாயை, அ.தி.மு.க., கொண்டு சேர்த்துள்ளது.

தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு, 7.5 கோடி ரூபாய் என்றால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, எத்தனை கோடி ரூபாயை, அ.தி.மு.க., வைத்துள்ளது என்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


பணத்தை மட்டுமே, தேர்தல் மூலதனமாகக் கொண்டு செயல்படும், அ.தி.மு.க.,வை நேரடி யாக சாட மனம் இல்லாத, மக்கள் நலக் கூட்டணியினர், தி.மு.க., மீது பாய்வதற்கான காரணம், ஊர் அறிந்த ரகசியம்.


மாநில சுயாட்சி பற்றியும், கூட்டணி ஆட்சி பற்றியும், கம்யூனிஸ்டுகள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொள்வது,

மாநில சுயாட்சி என்பது வேறு; கூட்டணி ஆட்சி என்பது வேறு. இரண்டையும் அவர்கள் குழப்பிக் கொள்கின்றனர்.


தமிழகத்தில், தனிக் கட்சி ஆட்சி அமைந்தாலும் சரி, கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சரி, மாநில உரிமைகளை இழக்காமல், வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான், மாநில சுயாட்சி.

கம்யூனிஸ்டுகள் சொல்வது போல, மாநில சுயாட்சி என்பது, கூட்டணி ஆட்சி என்ற பொருள் அல்ல. தமிழகத்தின் அனைத்து உரிமைகளும், எந்த ஆட்சி நடந்தாலும் வென்று எடுக்க வேண்டும். இதில், தி.மு.க., நிலையான, தீர்க்கமான சிந்தனையைக் கொண்டுள்ளது.


தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அரசியல் லாபங்களை கணக்குப் போட்டு தேர்தலை சந்திப்பது இல்லை. வெளிப்படைத் தன்மையுடன் இலக்கை நோக்கி செல்கிறது. தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணியினர் போல, யாரையோ திருப்தி செய்து, அதன்மூலம் லாபம் ஈட்டும் எண்ணத்துடன் செயல்படவில்லை.


அ.தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற அலை, மக்கள் மத்தியில் வீசுகிறது. அந்த அலை, தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி, இந்த அலையில் உருத் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதனால், ஏற்படும் ஆத்திரத்தில், அவர்கள் விசும்பு கின்றனர். அது, இன்னும் சில நாட்களுக்கு இருக்கத்தான் செய்யும்.


டி.எம்.செல்வகணபதிதி.மு.க., தேர்தல் பணி குழு செயலர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016