கூட்டி கழித்து பார்க்கும் நேரம் - பொன்னான வாக்கு

Tamilnadu Assembly Election News: கூட்டி கழித்து பார்க்கும் நேரம் - பொன்னான வாக்கு

இந்த பாப்பையா, ஞானசம்பந்தன், ராஜா சமூகத்தாரை விசாரிக்க வேண்டும். வாழ்நாளில் எத்தனை முறை, 'கூட்டுக்குடும்பமா? தனிக்குடித்தனமா?' டைட்டிலை வைத்துப் பட்டிமன்றம் நடத்தியிருப்பார்கள்?
நிறைய குடும்ப விஷயங்களைத் தொட்டுப் பேசலாம். ஆங்காங்கே ஜோக்கடிக்கலாம். அழகாக அசடு வழியலாம். மாமியாரைப் போல, நாத்த னாரைப் போல, கொழுந்தனாரைப் போலவெல்லாம் மேடையில், 'மிமிக்ரி' செய்து கைதட்டல் வாங்கலாம்.
சிலதெல்லாம் எப்போதும் பச்சை. கூட்டுக் குடும்பமே சிறந்தது என்று நடுவர் மன்றம் தீர்ப்பளிக்கப் போவது, எல்லோருக்குமே தெரியும் என்றாலும் கேட்டுவிட்டுக் கிளம்புவதில் ஒரு திருப்தி.


இல்லை என்று சொல்வீர்களா?

மாநிலத்திலுமேகூட ஒரு கூட்டணி ஆட்சி அமைவது தான் மக்களுக்கு நல்லது. யாரும் தன்னிஷ்டத்துக்கு ஆடாமல், போடுகிற தாளத்துக்கேற்றவாறு ஆட முடியும். நீ தப்பு செய்தால், நான் தட்டிக் கேட்பேன். அவன் ஊழல் செய்தால், நாம் சேர்ந்து மிரட்டலாம்.


பள்ளிப் பிள்ளைகள், பரீட்சைக்கு முன்னால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒப்பித்துப் பார்த்துக் கொள்வது போல, நீ செய்வதை எனக்குச் சொல்லு. நான் செய்வதை உனக்குச் சொல்கிறேன். அடுத்தவன் கவனிக்கிறான் என்ற எண்ணம் இருக்கும்போது தான், செய்கிற காரியங்களில் ஒரு கவனம் இருக்கும்.


மேற்படி, ஏற்பாட்டைப் பற்றி உலகு தோன்றிய நாளாக, உள்ளூர் அரசியலில் பேசப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிப்போம். எழில் கொஞ்சும் கூட்டணி ஆட்சி ஒன்றை அமைப்போம். தமிழகத்தை சிங்கப்பூர் அல்லது சிலுக்குவார்பேட்டையாக்குவோம். தப்பித்தவறியும் தமிழகம், தமிழகமாக இருந்து விடக்கூடாது என்பதே முக்கியம்.

தி.மு.க., - - அ.தி.மு.க., நீங்கலாக மாநிலத்தில் குப்பை அல்லது ரத்தினம் கொட்டிக் கொண்டிருக்கும் அத்தனை கட்சிகளுமே, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியிருக்கின்றன. இதுவரை சொல்லாத கட்சிகள் உண்டென்றால் இனி சொல்லும். அதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் நமது இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு (ரெண்டுங்கெட்டான் தலைவர்களல்ல) ஆட்சியதிகாரம் முக்கியமல்ல. மக்கள் நலன் தான் பரம ப்ரீதி.


ஒன்றும் தப்பில்லை. நல்ல யோசனை தான். சட்டாம்பிள்ளைகளை எதிரே வைத்துக் கொண்டு ஆட்சி புரிவது, ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் இம்சையாக இருக்குமே தவிர, மக்களுக்கு நல்லது தான்.


வைகோ சொல்கிறார். விஜயகாந்த் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அந்த நாலைந்து கட்சிகளுக்கும், ஆட்சியில் பங்கிருக்கும். யாருக்கும் தெரியாமல், யாரும் எந்தத் தப்பும் செய்துவிட முடியாது. கவனிக்க ஆள் இருக்கிறார்கள் என்ப தாலேயே, எல்லோரும் தொழில் சுத்தம் காப்பார்கள். ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்களேன்!


நியாயமான கோரிக்கை தான். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். விஜயகாந்த் தலைமை. கேப்டன் விஜயகாந்த் கட்சியின் கொள்கைகள் என்ன? தி.மு.க., - அ.தி.மு.க.,வை அகற்றுவது. இதைத் தாண்டி இன்னொன்று சொல்ல முடியுமா?


கூட்டணியில் இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கொள்கைகள் உண்டு. நிறையவே உண்டு. என்ன பேஜாரென்றால் எல்லாமே நவராத்திரி கொலுவில் வைக்கிற சொப்புப் பதார்த்தங்களைப் போன்ற கொள்கைகள். பார்க்க, கேட்க, படிக்க, ரசிக்கப் பிரமாதமாக இருக்குமே தவிர, நடைமுறையில் வேலைக்கு ஆகாது.


ஏற்கனவே, வளர்ச்சியில் தமிழகம் ஐம்பதாண்டுகள் பின் தங்கியிருப்பதாகப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்டு கள் அதிகாரத்தில் பங்கெடுத்தால் அதை ஐநுாறாண்டுகளாக்காமல் ஓயமாட்டார்கள். இந்தப் பக்கம், கேப்டன் கச்சத்தீவை மீட்பதற்கு நாலைந்து பட்டாலி யன்களுடன் போயிருக்கும்போது, அந்தப் பக்கம் இவர்கள் ஏடாகூடமாக என்னவாவது செய்து தொலைத்தால் யார் பொறுப்பு?


திருமாவளவன் இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் தலித்துகளை முன்னேற்றிக் கொண்டு, இன்னொரு பக்கம், ஈழத் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க ஆரம்பித்தாலே, கம்யூனிஸ்டுகள் குரல்வளையைப் பிடித்து விடுவார்கள். நண்பர்களுக்குள் சண்டையெல்லாம் வராது. ஆனால், கொள்கைக்கு நட்பு ஆகாதே?


அதெல்லாம் பரவாயில்லை, வாசன் இருக்கிறார்; அவர் பஞ்சாயத்து பேசி வைப்பார் என்பீர்களானால், அவர் நட்டு வளர்க்கும் நாலு மரங்களுக்கே இன்னும் நீரூற்ற ஆரம்பிக்கவில்லை. இவர் நால்வர் அல்லது ஐவரணிக்கு எங்கிருந்து மத்தியஸ்தம் பண்ண வருவார்?


வைகோவோ, 'ஹர்ட் ரிட்டையர்டு' அல்லது பதவித் துறவறம் மேற்கொண்டு விட்டார். இனி எதிலும் போட்டியிடுவதே இல்லை என்பது எத்தனை அதிர்ச்சிகரமான முடிவு. பந்தியிலேயே இல்லாதவர் பாயசத்தில் உப்பு ஜாஸ்தி என்று எப்படிச் சொல்ல முடியும்?


ஒரே குழப்பம். எல்லாமே இடியாப்பச் சிக்கல். நல்ல ரசம் சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள கூட்டு பிரமாதமாகத்தான் இருக்கும். ஆனால், கூட்டில் போடுகிற காய்கறிகளின் தரம் முக்கியமல்லவா?


ஒரு சிறந்த கூட்டணியாட்சி அரிய பல சாதனைகள் படைக்கக்கூடியது தான். அதில் சற்றும் சந்தேகம் வேண்டாம். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆண்ட காலத்தை அமைதியாக மனத்துக்குள் ஓடவிட்டுப் பார்த்தால், எத்தனை அக்கிரமங்கள், எத்தனை அதிகார துஷ்பிரயோகங்கள், எத்தனை மெத்தனம், எவ்வளவு ஊழல் என்று நெஞ்சு பதைக்காமல் இருக்க முடியாது.

ஆனால், ஒரு பொருந்தாக் கூட்டணியோ, தரமற்ற கூட்டணியோ, சந்தர்ப்பவாதக் கூட்டணியோ, பதவி தாகம் கொண்ட கூட்டணியோ இந்த திராவிடக் கட்சிகளின் மாற்றாக இருக்க முடியாது.

துரதிருஷ்டவசமாக நமக்கு வாய்க்கிற கூட்டணிப் பதார்த்தங்களெல்லாம் அப்படித்தான் அமைந்து விடுகின்றன. என்ன செய்ய?


பட்டிமன்ற நடுவர்கள் கூட்டுக் குடும்பமே சிறந்தது என்று தீர்ப்பளிப்பதைக் கேட்டு ரசிக்க யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால், நடைமுறை சவுகரியங்களை உத்தேசித்து, தனித்துச் செல்லும் குடும்பங்களே மிகுதி என்பதை எண்ணிப் பார்க்கலாம்.


அடுத்த வாரம் இந்நேரம் ஆட்டத்தில் ஜெயித்தது யாரென்று தெரிந்திருக்கும். யார் வேண்டு மானாலும் ஜெயிக்கட்டும். ஆனால், தோற்பது வாக்காளர்களாக இருந்து விடக்கூடாது. அதற்குத்தான் இதெல்லாமே!


தொடர்புக்கு:

பா.ராகவன்

writerpara@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016