தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது வரலாற்று பிழை - ‛வூடுகட்டி அடிக்கும்' காடுவெட்டி குரு

Tamilnadu Assembly Election News: தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது வரலாற்று பிழை - ‛வூடுகட்டி அடிக்கும்' காடுவெட்டி குரு

''தி.மு.க., -- அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுடனும் பா.ம.க., கூட்டணி அமைத்ததை, வரலாற்று பிழையாக கருதுகிறோம்,'' என, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


வழக்கமாக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் நீங்கள், இந்த முறை அப்படி செல்லவில்லையே ஏன்?யாரோ உங்களுக்கு கொடுத்த தவறான தகவலை வைத்து கேட்கிறீர்கள். தமிழகம் முழுவதும், தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக, பென்னாகரம் தொகுதியில் பிரசாரம் செய்து விட்டு, என் தொகுதிக்கு திரும்பி, அங்கு பிரசாரத்தை மீண்டும் துவக்கி உள்ளேன்.


பா.ம.க., தனித்து போட்டி என்ற முடிவு, எப்படி எடுக்கப்பட்டது?

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான், அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தை, 50 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில், திராவிட கட்சிகள் லஞ்சம், ஊழலில் ஊறித் திளைத்து, வளர்ச்சியை கெடுத்து விட்டனர். தமிழகத்தை, லஞ்சப் பிடியில் இருந்து விடுவிக்கவே, தனித்து போட்டியிட முடிவெடுத்தோம். மாற்றம் கட்டாயம் ஏற்படும்.


அ.தி.மு.க., -- தி.மு.க., தேர்தல் அறிக்கைகளோடு ஒப்பிட்டால், பா.ம.க., தேர்தல் அறிக்கை எந்த விதத்தில் சிறப்பானது?

கடந்த, 35 ஆண்டுகளாக, மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என, பா.ம.க., போராடி வருகிறது. தேர்தல் அறிக்கையில், 'மது ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி' ஆகிய திட்டங்களுக்கு, முன்னுரிமை கொடுக்கப்பட்டு

உள்ளது.

ஆனால், 50 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள், தங்கள் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. ஆனால், இப்போது தான், கருணாநிதி, மதுவை ஒழிக்க புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஈடாக, நானும் படிப்படியாக ஒழிப்பேன் என்று ஜெயலலிதாவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப்பின் இதை சொல்ல மாட்டார்கள்.


உளுந்துார்பேட்டையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில், விஜயகாந்த், கிராமம் கிராமமாக சுற்றி வருகிறார்.அவரை பா.ம.க.,வால், வெற்றி கொள்ள முடியுமா?

விஜயகாந்த், ஒரு தலைவரே இல்லை. அவரை இந்த முறை வீழ்த்தி, உளுந்துார்பேட்டையில், பா.ம.க., வெற்றி பெறும்.


தேர்தல் அறிக்கை என்பது, மக்கள் நலனுக்கான விஷயங்களை உள்ளடக்கிய விஷயம் என்றால், அதை காப்பியடிப்பதில் என்ன தவறு இருக்கிறது?

தேர்தல் அறிக்கையை காப்பியடிப்பது தவறு இல்லை. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்று முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆகியோர், பா.ம.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை ஏன், தங்கள் ஆட்சி காலத்தில் செய்து முடிக்கவில்லை.

உங்களை கைது செய்ததோடு, பா.ம.க., நிறுவனர் ராமதாசையும் கைது செய்து, சிறையில் அடைத்த ஜெயலலிதாவை வீழ்த்த, பா.ம.க.,வினர், தி.மு.க., பக்கம் அணி திரள வேண்டும் என,


தி.மு.க., பிரசாரம் செய்து வருகிறதே. அது சரியா?

நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் வெற்றி பெறும் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் ஓட்டுகளை கவர, தி.மு.க., அல்ல, யார் முயற்சித்தாலும், அது நடக்காது.


தெருவுக்கு தெரு, 'டாஸ்மாக்' கடையை திறந்தது ஜெயலலிதா தான் என, மேடைகளிலும், பிரசாரங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே?

தி.மு.க., -- அ.தி.மு.க., ஆகிய கட்சிகள், தங்கள் ஆட்சி காலத்தில், 'டாஸ்மாக்' கடைகளை திறந்தன. அவர்கள் இருவரில், ஜெயலலிதா தான், முக்குக்கு முக்கு மதுக் கடைகளைத் திறந்தார். அப்படிப்பட்ட ஜெயலலிதா தான், மக்களை ஏமாற்ற, 'உங்களால் நான், உங்களுக்காகவே நான்' என, மேடை தோறும் முழங்கி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.


பிரசார மேடைகளில், உயரமான இடத்தில் ஜெயலலிதா அமர்ந்து கொண்டு, தரையில் வேட்பாளர்களை அமர்த்திய நடைமுறையை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களுக்காக சேவை செய்பவர்களை, மரியாதையோடு நடத்த வேண்டும். ஆனால், ஜெயலலிதா எப்போதும் அப்படி செய்ய மாட்டார். வேட்பாளர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறார். இதை வேட்பாளர்களும், மக்களும் தான் உணர வேண்டும்.


ஜெயலலிதாவின் கார் டயரை நோக்கி, குனிந்து கும்பிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,

செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பதவி ஆசைக்காக கும்பிடு போடுகிறார். ஒரு மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு வரையில் இருந்தவர், அந்த பதவிக்கு மரியாதை கொடுப்பதற்காகவாவது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து அதே காரியங்களை செய்து கொண்டிருந்தால், முதல்வர் பதவி மீதே மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிடும்.


'தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா' என்ற சொற்றொடரை, அ.தி.மு.க.,வினர் எப்படி எடுத்துக் கொள்வர்?

இந்தியாவிலேயே ஒரு கட்சியில் ஆட்களை வைத்துக் கொண்டு, அவர்களை கொத்தடிமைகளாக நடத்துகின்றனர் என்றால், அது, அ.தி.மு.க.,வில் மட்டும்தான். இப்படிப்பட்ட ஒரு கட்சியை, தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

'தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா' என்ற சொற்றொடரையே, 'தமிழன் என்று சொல்லடா; தலை குனிந்து நில்லடா' என, அவர்கள் மாற்றச் சொல்வதாக கேள்வி. பதவிக்காக எதையும் செய்யத் துணிபவர்களை வைத்து, கட்சி நடத்துகிறார் ஜெயலலிதா.


ஒரு வேளை, பா.ம.க.,வுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிட்டவில்லை என்றால், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்?

பா.ம.க., கட்டாயம் வெற்றி பெறும். அதனால், அந்த கேள்விக்கே இடம் இல்லை. எப்படி இருந்தாலும், எங்கள் மக்கள் பணி தொடரும்.


இந்த தேர்தலில், சில பிரதான கட்சிகளையும் கடந்து, நோட்டாவுக்கு கூடுதல் ஓட்டுகள்

கிடைக்கக்கூடும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றனவே?

கருத்து கணிப்புகளில் இடம்பெற மக்கள் விரும்பாமல், அப்படி செய்திருக்கலாம். தேர்தலில் அப்படி நடக்காது. நோட்டாவுக்கு ஓட்டளிக்க எண்ணுபவர்கள், இந்த முறை, கட்டாயம் பா.ம.க.,வுக்கு தான் ஓட்டளிப்பர்.


தேர்தலுக்குப் பின், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அஸ்தமனமாகும் என, சிலர் கணித்து சொல்கின்றனரே? உங்கள் கணிப்பு?

அப்படி நான் பார்க்கவில்லை. ஒரு தேர்தலில், சில கட்சிகள் தோற்கும் என்பதால், அந்த கட்சிக்கு அஸ்தமனம் என்றால், தமிழகத்தில் எந்த கட்சியும் இருக்க முடியாது.


பா.ம.க., ஏற்கனவே அமைத்த கூட்டணிகளில், எந்த கூட்டணியை சிறப்பானது என்று

சொல்வீர்கள்?

தி.மு.க., -- அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுடனும் பா.ம.க., கூட்டணி அமைத்திருந்தது. அதைத் தான் நாங்கள் வரலாற்று பிழையாக கருதுகிறோம். அதனால், இதில் யார் சிறப்பானவர் என சொல்ல முடியாது. தற்போது எடுத்திருக்கும் தனித்து போட்டி என்ற முடிவை, பல காலங்களுக்கு முன்பே எடுத்திருந்திருந்தால், ஆட்சியை பிடித்திருப்போம்.


தமிழகத்தில் தான் அதிக அளவிலான கவுரவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கவுரவக் கொலைகள் நடக்க விடாமல், எப்படி தடுப்பது?

கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பே, காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அதனால், இது காலம் காலமாக இருப்பது தான். இருந்தாலும், கவுரவக் கொலைகள் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.


ஒரு எம்.எல்.ஏ.,வாக தமிழக சட்டசபையில், ஐந்தாண்டுகளில் உங்கள் குரலை கேட்கவே

முடியவில்லையே?

ஓராண்டு காலம் சிறையில் இருந்தேன். ஆறு மாதங்களாக, உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன். எதிர்க்கட்சிக்காரர்கள் பேசுவதற்கே, சட்டசபையில் வாய்ப்பு தரவில்லை. ஜெயலலிதாவை பாராட்டி பேசினால் மட்டுமே, ஐந்தாண்டுகளாக, சட்டசபையில் வாய்ப்பளித்தனர். இப்படிப்பட்ட சூழலில், மக்களுக்காக பேச எத்தனையோ முறை வாய்ப்பு கேட்டேன்; அளிக்கவில்லை. பா.ம.க., ஆட்சியில், இந்த அவலத்தை துடைத்தெறிவோம்.

தி.மு.க., ஆட்சியில் சட்டசபை; அ.தி.மு.க., ஆட்சியில் சட்டசபை. எதில் ஜனநாயகம் இருக்கும்?

தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜனநாயகம் இருக்கும். அ.தி.மு.க.,வில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகம் என்பதற்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. ஜால்ரா போடுவதைத்தான், ஜனநாயகம் என, அவர்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர். அதனால், ஜனநாயகத்தை பின்பற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், சபையில் வேலையே இல்லை.


தனது, 93 வயதிலும் அசராமல் வேன் மூலம் பிரசாரத்துக்கு செல்கிறார், தி.மு.க. தலைவர்

கருணாநிதி. ஹெலிகாப்டரில் ஊர் ஊராக செல்கிறார் ஜெயலலிதா. இருவரின் பிரசாரம் குறித்து செல்லுங்கள்?

தன், 93 வயதிலும், கருணாநிதி பிரசாரம் செய்வதை பாராட்ட வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவர். இந்தியா முழுவதும் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்கள் அவ்வளவு பேருக்கும் கருணாநிதியை தெரியும். பழக்கமும் இருக்கிறது. தமிழக அரசியலிலும் மூத்த தலைவராக, அவர்தான் இருக்கிறார்.

ஐம்பதாண்டு கால அரசியல் வாழ்வில், தனக்கு கிடைத்த ஆட்சி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, மக்கள் பணிகளை மட்டும் அவர் செய்திருந்தால், அவர் இந்த வயதில், பிரசாரத்துக்காக மக்களை தேடி போக வேண்டியிருந்திருக்காது. வீட்டில் இருந்தபடியே வெற்றிக் கனியை பறித்திருக்கலாம்.

ஜெயலலிதாவைப் பற்றி, பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. மன்னிக்கவும்.


தமிழக சட்டம் -- ஒழுங்கு சூழல் எப்படி உள்ளது?

நீங்கள் கேள்வி கேட்டு, சட்டம் - ஒழுங்கு முழுமையாக சரியில்லை என, நான் சொல்லும் அளவுக்குத்தான் உள்ளது. தினமும் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களைத்தான், பத்திரிகைகளில் பட்டியலிடுகின்றனரே. அதுதான், சட்டம் - ஒழுங்கு நிலைக்கு சான்று.

தமிழக சட்டசபை தேர்தலில், தொங்கு சட்டசபை உருவாகி, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்பட்டால், தி.மு.க., -- அ.தி.மு.க., இரு கட்சிகளில் யாருக்கு, ஆதரவு?

அப்படியொரு சூழல் ஏற்படாது என்பது, என் கணிப்பு. இருந்தாலும், சூழல் ஏற்பட்டால், கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும்.


கோடிகளை கொட்டி நடக்கும் தேர்தல் நடைமுறைகள் சரியா?

தேர்தல் கமிஷன் நேர்மையாகவும், நியாயமாகவும், கடுமையாகவும் நடக்கும் என்றால், இப்படிப்பட்ட நடைமுறைகள் இருக்காது.

தேர்தல் கமிஷன், கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது, முறையாக நடவடிக்கை எடுக்கிறதா?

தேர்தல் கமிஷனில் கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. புகார்கள் மீது கட்டாயம் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஜெயங்கொண்டம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறீர்கள். மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன?

தொகுதி நிதியில், நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டடம், பள்ளி கட்டடம், கிராமங்களில் பழுதான சாலைகள் சீரமைப்பு, அரசு பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். என்னால், முடிந்த திட்டங்கள் அனைத்தும் செய்து முடித்துள்ளேன்.


கடவுள் பக்தி உண்டா?

தமிழ் கடவுள் முருகனை வழிபடுவோம். அவர்தான் எங்கள் குலசாமி.


படிக்கும் ஆர்வம் எப்படி? கடைசியாக வாசித்த புத்தகம்?

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டு. போராளிகள் பற்றிய புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். கண் விழித்தும் படிப்பேன்.

காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவனை வீழ்த்த, பா.ம.க., முனைப்பாக உள்ளதாமே?

எல்லா தொகுதிகளையும் போலத்தான், அந்த தொகுதியிலும் எங்கள் வேட்பாளர் வெற்றிக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். மற்றபடி, திருமாவளவனுக்காக எந்த சிறப்பு முயற்சியும் கிடையாது.


அடுத்து நடக்கும் லோக்சபா தேர்தலில், உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அப்போதும் தனித்து தான் போட்டியா? இடையில், உள்ளாட்சி தேர்தல் வேறு. அதிலும், இதே நிலைப்பாடுதானா?

கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும். பின்னால், நடப்பதை இப்போதே சொல்ல முடியாது.


தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, களம் காணும் நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் குறித்து உங்கள் பார்வை?

ஈழ தமிழர் பிரச்னைகளை மையப்படுத்தி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். அதைத் தவிர, அவரைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை.


விஜயகாந்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வேட்பாளரா வழக்கறிஞர் பாலு?

விஜயகாந்த் ஒரு தலைவரே கிடையாது என ஏற்கனவே சொல்லி விட்டேன். அவரை விட எல்லாவிதங்களிலும் சிறந்தவர் வழக்கறிஞர் பாலு. அவர் வெற்றி பெறுவார்.


மருத்துவக் கல்லுாரி சேர்க்கையில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமா?

நுழைவுத் தேர்வு கட்டாயமாக்க வேண்டியதில்லை. சொல்லப் போனால், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கான நுழையாத் தேர்வுதான் இது. 1986ல் இருந்து, நுழைவுத் தேர்வு வேண்டாம் என, பா.ம.க., தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில், தமிழக மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்றால், தமிழக அரசு, இந்த விஷயத்தில், முனைப்புடன் செயல்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.


ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு?

சொத்துகளை தாறுமாறாக வாங்கிக் குவித்த ஜெயலலிதாவுக்கு, அப்படியொரு வழக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மொத்த தமிழகமும் அவருடையதாகி இருக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். இயற்கையின் விருப்பமும் அதுதான்.


பயோ - டேட்டா

பெயர் : காடுவெட்டி குரு

வயது : 55

கல்வித் தகுதி : எம்.ஏ.,

கட்சி : வன்னியர் சங்கம்

பொறுப்பு : தலைவர்

சொந்த ஊர் : காடுவெட்டி, பெரம்பலுார்


-நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016