ஆள்பவர்களும் ஆட்டுவிப்பவர்களும்..!

Tamilnadu Assembly Election News: ஆள்பவர்களும் ஆட்டுவிப்பவர்களும்..!

இன்னும் சில தினங்களில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்களை தேர்வு செய்யப் போகிறோம். உண்மையில், தேர்வு செய்யப்போகிற நாம் தான், ஆளப்போகிறவர்களை ஆட்டுவிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நம் தமிழக அரசியல் சூழ்நிலையில், நம்மை ஆட்டுவிப்பவர்களாக அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
அவர்கள் பார்வையில், 'வாக்காளன்' என்பவன் இலவசத்திற்காக ஏங்கி நிற்பவன். ஓட்டுக்கு பணம் கிடைக்குமா என சிந்திப்பவன். தி.மு.க., - அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைகள் வரப்போகிறது என்ற செய்திகளுக்கு இடையே, பொதுவான பேச்சு என்னவாக இருந்தது? எந்த கட்சி, என்ன இலவசத்தை அறிவிக்க போகிறது என்பது தனே!

மக்களும், 'அந்த கட்சி பிரிஜ் தரும், இந்த கட்சி அலைபேசி தரும்; யார் தருகின்றனர் பார்ப்போம்!' என்று அல்லவா பந்தயம் பேசினர். தேர்தல் அறிக்கையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள் என்னவெல்லாம் இடம்பெற போகிறது என்று நாம் கவலைப்பட்டோமா? கட்சிகளின் தேர்தல் அறிக்கை பற்றிய ஊடகங்களின் யூகங்களும், இலவசங்களை பற்றியே இருந்தது. ஏன் இந்த நிலைமை?


வளர்ச்சி அரசியல்கடந்த பத்தாண்டுகளில், 'வாங்கியே' நாம் பழகி விட்டோம். இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், நம்மால் வாங்க முடிந்த தொலைக்காட்சி பெட்டியையும், மின் விசிறியையும் எதிர்பார்த்து, தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம், தங்கு தடையற்ற போக்குவரத்து வசதிகள், துாய குடிநீர், நீர்ப்பாசன திட்டங்கள், உயர் மருத்துவ வசதி... என, பலவற்றை பறிகொடுத்தோம்.


ஏனென்றால், இங்கே 'வளர்ச்சி அரசியல்' பற்றி யாரும் சிந்திக்கவில்லை. 'கவர்ச்சி அரசியலே' தேர்தல் காலத்தில் மேலோங்கி இருக்கிறது.'வளர்ச்சி அரசியல்' பற்றி சிந்திக்க, அமெரிக்கா விற்கு செல்ல வேண்டாம். அருகில் உள்ள கேரளாவே போதும்.


அங்கு வாக்காளர்களே எஜமானர்கள்! தொகுதிக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு. கட்சி விருப்பு, வெறுப்புகள் இரண்டாம் பட்சம் தான். கூட்டணியின் பலம், கட்சி சார்பானவர்கள் ஓட்டுகள் போன்றவையும் முடிவை தீர்மானிப்பது வேறு விஷயம். அதனால் தான், காங்கிரஸ் அல்லது மார்க்சிஸ்ட் கூட்டணி மாறி, மாறி ஆட்சியில் அமர்கிறது. என்றாலும், ஒட்டு மொத்த வாக்காளர்களும் ஒரே அணி பக்கம் சாய்வது இல்லை.


எதிர்க்கட்சிகளே கண்ணில் தெரியாமல், சட்டசபையில் அத்தனை பேரும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என, மக்கள் அமர வைக்க மாட்டார்கள். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் வித்தியாசம் எல்லாம் ஐந்துக்குள் தான் இருக்கும்.


ஏனென்றால் வேட்பாளரின் செல்வாக்கு, அவரின் செயல்பாடு, தனித்திறன் தான் ஓட்டுகளை தரும். அதனால் தான் பல எம்.எல்.ஏ.,க்கள், ஒரே தொகுதியில், தொடர்ந்து மூன்று, நான்கு முறை வெற்றி பெறுகின்றனர்.


நம்மூரில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் எல்லாம் கூட அடிக்கடி தொகுதிகளை மாற்றுகிறார்கள். அதிகபட்சமாய் இரண்டு, மூன்று முறை ஒரே தொகுதியில் போட்டியிடுவதோடு சரி. கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி, 10 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அச்சுதானந்தன் போன்றவர்களும் அப்படித்தான்!


ஓட்டு என்ற ஆயுதம்

வெற்றி பெற்றால், தொகுதியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும்; அடிக்கடி தொகுதிக்கு வரவேண்டும், மக்களோடு மக்களாக அவர்களின் பிரச்னைகளுக்காக அலைய வேண்டும். சட்டசபையில் ஆணித்தரமாக பேச வேண்டும். இப்படி இருந்தால் தான், அவர் எம்.எல்.ஏ.; இல்லை என்றால் அடுத்த தேர்தல் வரும் போது, ஓட்டு என்ற ஆயுதத்தால் எட்டி உதைப்பர்.


அங்கு வேட்பாளர்கள், தங்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு, தனித்தனியாய் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். பிரசார கூட்டங்களிலும் வெறுமனே, தலைவர் கூறிய மாநிலம் சார்ந்த வாக்குறுதிகளை தராமல், உள்ளூர் விஷயங்களையே விவாதிக்கின்றனர்.


இந்த நேரத்தில், நம்மூர் வேட்பாளர்களோடு, தேர்தல் பிரசாரத்தின் போது செய்தி சேகரிக்க செல்லும் போது கிடைக்கும் அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை. 'சார் பிரசாரத்தில் ஏதாவது பேசுங்கள்... வாக்குறுதிகளை சொல்லுங்கள்; நீங்கள் பேசுவதை செய்தியாக வெளியிடுகிறோம்' என்று வேட்பாளர்களை கேட்டால், அவர்கள் பதில், 'அது தான் அம்மா சொல்லிட்டாங்களே, அது தான் தளபதி பேசிட்டாரே!' இரண்டு கட்சிகளில் மட்டும் அல்ல; எல்லா கட்சிகளிலும் இது தான் நிலைமை. சில சாதனை எம்.எல்.ஏ.,க்கள் விதிவிலக்கு.


'தலைவர்கள் சொல்வது ஓட்டுகளை தந்து விடும்; நமக்கென்று எதுவும் சொல்வதற்கு இல்லை' என்றபடி கைகூப்பி கடந்து செல்கிறார்கள் வேட்பாளர்கள். இதுவும் உத்தரவாதத்தில் இருந்து தப்பிக்கும் ஒருவித உத்தி தான். வெற்றி பெற்ற பிறகும், அடுத்த முறை அதே தொகுதியில்

ஓட்டு கேட்க வரும்போதும், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் தப்பிக்கலாம். ஏனெனில், எம்.எல்.ஏ.,வுக்கென்று, அவர் தனி வாக்குறுதி எதுவும் தரவில்லையே!

சரி... இப்போதே ரோட்டோரம் பேசத் தயங்குபவர், சட்டசபையில் எப்படி பேசுவார்? நாம் சிந்திப்பது இல்லை.எளிமையான அரசியல்இன்னொரு விஷயமாக, நாம் கவனிக்க வேண்டியது கேரள அரசியல்வாதிகளின் எளிமை. இந்த இடத்தில், 'எளிமை' என்ற வார்த்தை தவறு.


நமது அரசியல் சூழல், அதனை எளிமை என்று சொல்ல வைக்கிறது. மற்றபடி அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யத்தான், 'பதவி' என்ற எண்ணம் அங்கே மேலோங்கி உள்ளதால், வார்டு கவுன்சிலர் முதல் மாநில முதல்வர் வரை, மக்களோடு வாழ்கின்றனர்.


சாமான்யனும் எளிதில் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். உரிமையோடு கேள்வி கேட்க முடியும். நம் நிலைமை என்ன என்று எழுதித் தெரிய வேண்டியது இல்லை. உள்ளூர் கவுன்சிலரைக் கூட, 'வானத்தில் இருந்து குதித்தவராக' நாம் பார்க்கிறோம். இதில் தவறு நம்மிடம் இல்லை. அவர்கள் அணுகுமுறையில் இருக்கிறது.


அரசியலும், அதிகாரமும் தங்கள் வளர்ச்சிக்கானது என்பதை, கேரள மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த நிலை தமிழகத்தில் வர வேண்டும். இன்றைய தமிழக இளைஞர்களிடம், முதல் தலைமுறை வாக்காளர்களிடம் இந்த லட்சியம், வேட்கை இருப்பதை அறிய முடிகிறது.

'நீங்கள் எனக்கு என்ன தரப் போகிறீர்கள்' என்று அரசியல்வாதியிடம் கேட்பதை விட, 'தொகுதிக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கும் உறுதி, ஒவ்வொரு வாக்காளரிடமும் உருவாக வேண்டும். ஒரு ஓட்டிற்காக, ஒரு முறை வாங்கும் பணமோ, பொருளோ நம்மை நிரந்தர அடிமையாக்கி விடும். ஜனநாயகத்திற்காக மக்களா, மக்களுக்காக ஜனநாயகமா என்றால், மக்களுக்காக தானே! ஏனென்றால் இது மக்களாட்சி.


மக்களாட்சியில் ஓட்டு தான் ஆயுதம். அதனை விலை பேசாமல், வீணாக்காமல், ஆக்கப்பணிக்கு பயன்படுத்துவோம். நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பவரை, தேர்வு செய்வோம்!


ஜி.வி.ரமேஷ் குமார்

செய்தி ஆசிரியர், தினமலர், மதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016