தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும்

Tamilnadu Assembly Election News: தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும்

மக்களுக்கு அடிப்படை தேவையே, உணவு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து. இந்த

நான்கையும், இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த கட்சியும், பூர்த்தி செய்யவில்லை. இன்று, எத்தனை அரசு மருத்துவமனைகள் சுத்தமாகவும், லஞ்சம் இன்றியும் செயல்படுகின்றன? இதனால், தனியார் மருத்துவமனைகள் அதிகரித்ததோடு, மக்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் இழந்து வருகின்றனர்.


தனியார் ஸ்கேன் மையங்களில், ஆயிரக்கணக்கில் பணத்தை பிடுங்குகின்றனர். அதே, ஸ்கேனை தொண்டு நிறுவனங்கள், வெறும், 500 ரூபாய்க்கு எடுக்கின்றனர். இதை ஏன் அரசு செய்யக்கூடாது? ஒரு சட்டசபை தொகுதிக்கு, இரண்டு ஸ்கேன் மையங்களை அமைக்கலாமே! மாநகராட்சி மூலம் செயல்படும் சில பரிசோதனை கூடங்கள், பல நாட்கள் இருந்தும் இல்லாத நிலையிலேயே உள்ளன.
மருத்துவம் படிக்க லட்சக்கணக்கில் செலவு செய்யும் மாணவர்கள், படித்து முடித்ததும், மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி விடுகின்றனர். அதேபோல், பொறியியல் படிக்கும் மாணவர்கள், படித்து முடித்து வெளியே வந்ததும், கடனாளியாக தான் வருகின்றனர். 100 பேரில், 30 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது.


மற்றவர்கள் வங்கியில் பெற்ற கடனையும் அடைக்க முடியாமல், தாங்கள் கண்ட கனவையும் நனவாக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, அனைத்து தனியார் கல்லுாரி கட்டணத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ சீட்டுக்கு, மெரிட் முறையை கொண்டு வர வேண்டும்.


எதற்கெடுத்தாலும் இலவசம் தரும் அரசு, ஏன் கல்வியை இலவசமாக தரக் கூடாது? எல்.கே.ஜி., என்றால் கூட, குறைந்தபட்சம், 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. 100 அரசு பள்ளிகளில், ஐந்தில் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சியை எட்ட முடிகிறது. அரசு மனது வைத்தால், அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வர முடியும். தனியார் பள்ளிகளுக்காகவே அரசு பள்ளிகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.


போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், தலைவர்கள் வரும்போது தான், 'பளிச்' என மாறுகிறது. பேருந்து, ரயில் போக்குவரத்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், எளிதாக்க வேண்டும்.


இதை எல்லாம் அரசால் மட்டுமே செய்ய முடியும். ஆனால், அந்த அரசு மக்களை அடிமைகளாகவே வைக்க பார்க்கிறது. போலி அறிவிப்புகளால் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். மக்கள் மாறி விட்டனர். அரசாள்பவர்களும் மாற வேண்டும்.


அதேபோல், தேர்தல் என்றாலே திருவிழா போல் நடக்கிறது. லட்சக்கணக்கில் மக்களை கூட்டுவது; தங்களுக்கு சாதகமான, 'டிவி' சேனல் மூலம் கருத்து கணிப்பு என்ற பெயரில், கருத்து திணிப்பு நடத்துவது என, மக்களை குழப்பும் வகையிலேயே தேர்தல் நடைமுறைகள் உள்ளன.

தேர்தல் கால அறிவிப்புகளை கூறும் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின், அறிவிப்புகளை நிறைவேற்ற தவறி விடுகின்றன. அவ்வாறு தவறும் வேட்பாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது அறிவிப்புகளுக்கு தடை செய்ய வேண்டும்.


இதை தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, தேர்தல் நியாயமாக நடக்கும். அரசாள்பவர்கள், தங்களை கடவுளை போல் நினைத்துக் கொள்கின்றனர். அவர்களை அரியணையில் அமர வைப்பதே மக்கள் தான் என்பதை உணர வேண்டும்.


ஏ.வி.எஸ்.மாரிமுத்து

வடசென்னை மக்கள் உரிமை

கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016