தி.மு.க., சொல்லும் மாநில சுயாட்சி என்ன?

Tamilnadu Assembly Election News: தி.மு.க., சொல்லும் மாநில சுயாட்சி என்ன?

தி.மு.க., சார்பில் பல்வேறு தேர்தல் விளம்பரங்கள் வெளியாகின்றன. ஒரு விளம்பரத்தில், 'சாராயக் கடையைத் திறந்துவிட்டு, குடும்பத்தையே அழித்து விட்டது அ.தி.மு.க.,' என்ற கருத்து இடம் பெறுகிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், 'தி.மு.க., ஆட்சியில், உடல் நலத்தைக் காக்கும் சர்பத்தா விற்பனை செய்தனர்?' என கேட்டார்.


அந்த இளைஞரின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. தனியாரின் மதுபான கடைகளை மூடி, அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் நேரடி மது விற்பனை கடைகளை, ஜெயலலிதா திறந்தார். அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இந்த கடைகளை மூடவில்லை. இவர்கள் ஆட்சியில் தான், மதுவிலக்கு துறையும் இருக்கும், மது விற்பனையும் இருக்கும் என்ற, புது வியாக்யானத்தை கண்டுபிடித்தனர்.
இப்படி தி.மு.க., செய்த தவறுகள் ஒன்று, இரண்டு அல்ல, ஏராளம். ஆனால், இந்த தவறுகளை எல்லாம் மறைத்து, தங்களை உத்தமர்கள் என்றும், நேர்மையான ஆட்சிக்கு தாங்கள் தான் முகவரி என்றும், தி.மு.க., பறைசாற்றுகிறது. இதை மக்கள் ஏற்கவில்லை. தங்களை நல்லவர்கள் என சொல்வதை மக்கள் ஏற்கவில்லை என, புரிந்து கொண்ட தி.மு.க., பிரசார யுத்தியை மாற்றி உள்ளது.


அக்கட்சியின் பொருளாளரான ஸ்டாலின், செல்லும் இடம் எல்லாம், 'நாங்கள் தவறுகள் செய்து இருக்கலாம். அதை திருத்திக் கொள்கிறோம். இனி, தவறுகள் நடக்காமல் சரி செய்வோம்' எனச் சொல்கிறார். இதன்மூலம், தி.மு.க., ஏதோ திருந்தி விட்டதைப் போலவும், இனிமேல் தவறே நடக்காமல் ஆட்சி செய்யும் என்பதைப் போலவும், ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்.


'நடுத்தர குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்தது குதிரை பந்தயம். இந்த சூதாட்டத்தை ஒழித்தவர்கள் நாங்கள் தான்' என, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குதிரை சிலை ஒன்றை அமைத்தவர் கருணாநிதி. குதிரை பந்தய ஒழிப்பு நினைவுச் சின்னத்தை வைத்த பின்பும், குதிரை பந்தயம் நடந்து கொண்டு தான் இருந்தது.


அதைப் போல, தவறுகள் நடக்காது என, ஊரெல்லாம் சென்று ஸ்டாலின் சொன்னாலும், ஒருபக்கம் அது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு உதாரணம் தான், குதிரை பந்தய ஒழிப்பின் நினைவுச் சின்னம். ஸ்டாலினின் இந்த வாக்குறுதி மூலம், மக்கள் தி.மு.க.,வை நம்பத் தயாராக இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது.


தி.மு.க.,வை பொறுத்தவரை, ஸ்டாலினை முன்னிறுத்தி, ஒற்றை நபர் சார்ந்த கட்சியையும், ஆட்சியை யும் உருவாக்க திட்டமிடுகின்றனர். அதன் வெளிப்பாடு தான், ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணம். ஒரு ஊரில் ஒரு பிரச்னை இருக்கிறது எனச் சொன்னால், அதை, மாவட்ட செயலர், ஒன்றிய செயலர்கள் கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வருவர். இது தான்,

உட்கட்சி ஜனநாயகம்.


ஸ்டாலினோ, ஊர் ஊராகச் சென்று, ஒவ்வொருவரையும் சந்தித்து, அவர்கள் பிரச்னையை அறிந்து வந்தாராம். அதன் அடிப்படையில் தான், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, மாநிலத்துக்கு பொதுவாகவும், மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் தயார் செய்யப்பட்டதாக சொல்கின்றனர். இந்த அணுகுமுறை, ஒரு நபர் சார்ந்த அதிகார மையத்தை உருவாக்கும் திட்டமாகும்.


இந்தியாவில், மக்கள் போற்றும் தலைவர்களாக திகழ்ந்த காந்தியோ, நேருவோ இதுபோல, மக்கள் பிரச்னைகளை அறிய, ஊர் ஊராகச் செல்லவும் இல்லை. அதைக் கொண்டு, கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் இல்லை.


ஊழல் குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றியும், அ.தி.மு.க., மீது, தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது. தமிழக தேர்தல் அதிகாரி மட்டும் அல்ல, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்துள்ளனர். தேர்தல் களத்தில், அ.தி.மு.க., வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறதோ, அதற்கு இணையாக தி.மு.க.,வும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான் வருகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.ஆனால், நாங்கள் நேர்மையானவர்கள். ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்கிறோம் என கூறிக் கொண்டு, ஆளும்கட்சிக்கு இணையான தேர்தல் முறைகேடுகளை, தி.மு.க.,வும் செய்கிறது.


தமிழகத்தில் மாற்றுக்கு இடமில்லை என்றும், கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க., அங்கம் பெறும் கூட்டணி ஆட்சி, மத்தியில் அமைவது தி.மு.க.,வுக்கு பிடிக்கும். லோக்சபாவில், ஒரு எம்.பி., கூட இல்லாத அக்கட்சிக்கு, கேபினெட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி கொடுத்தால், தி.மு.க.,வுக்கு பிடிக்கும்.


தமிழகத்தில், மைனாரிட்டியாக இருந்தாலும், தனித்தே ஆட்சி நடத்த வேண்டும் என சொல்லும்; நடத்தியும் காட்டும். தி.மு.க., சொல்லும், 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பது, தமிழகத்தில் தங்களது தனித்த ஆட்சி. மத்தியில் தாங்கள் பங்கேற்கும் கூட்டாட்சி.


சுயாட்சி என்பதன் அர்த்தத்தையே, தி.மு.க., மழுங்கடித்து, தனக்கு சாதகமாக திருப்புகிறது. மாநிலம் எல்லா உரிமைகளையும் பெற்று சுயமாக இருப்பதே, மாநில சுயாட்சி. தி.மு.க.,வை பொறுத்தவரை, அவர்கள் மட்டும் வளம் பெற்று வாழ்வதே மாநில சுயாட்சி.


மூர்த்திதமிழக தலைவர், ஏ.ஐ.டி.யு.சி.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016