ஒட்டை கப்பலின் மாலுமிகள் விஜயகாந்தும் வைகோவும் - காய்ச்சி எடுக்கிறார் காசி முத்து மாணிக்கம்

Tamilnadu Assembly Election News: ஒட்டை கப்பலின் மாலுமிகள் விஜயகாந்தும் வைகோவும் - காய்ச்சி எடுக்கிறார் காசி முத்து மாணிக்கம்

''ஓட்டை கப்பலின் மாலுமிகளாக விஜயகாந்த், வைகோ திகழ்கின்றனர்; மக்கள் நலக் கூட்டணி என்ற கப்பல் கரை சேராது,'' என, தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கூறினார். நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், மக்களிடம் எடுபட்டுஉள்ளதாகவும், மூன்று சதவீத ஓட்டுகள் எதிர்பார்த்ததை விட, கூடுதலாக அவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறதே?

நான்கு குருடர்கள் சேர்ந்து, யானையை தடவி பார்த்த கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கருணாநிதியா, ஸ்டாலினா... யார் முதல்வர்?

கருணாநிதி தான் முதல்வர் என, ஆயிரமாயிரம் முறை ஸ்டாலின் கூறியுள்ளார்.


நீங்களும் இந்த முறை போட்டியிட வாய்ப்பு கேட்டீர்கள்; கொடுக்கப்படவில்லை. அதனால் வருத்தமா?

தி.மு.க.,வில் மருத்துவர் அணி, சிறுபான்மையினர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இன்ஜினியர் அணி, விவசாய அணி என அனைத்து அணியினருக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் அணியை மட்டும் விட்டு விட்டீர்கள் என, கருணாநிதியிடம் கேட்டபோது அவர், 'வருத்தப்பட வேண்டாம். எம்.எல்.சி., இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.

என் பிறந்த நாளை ஒட்டி, அவரை சந்தித்தபோது, 'அடுத்த பிறந்த நாளில், நம் அரசில் இருப்பாய்' என, தாயுள்ளத்தோடு என்னிடம் சொன்னபோது, என் கண்களில் நீர் வழிந்தோடியது. போர்க்களத்தில் படையை வீழ்த்த, எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என, தலைமை எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். அந்த அடிப்படையில், என் பணிகளை சோர்வில்லாமல் செய்து வருகிறேன்.


தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் யாதவர் சமூகத்தவர்களுக்கு, கூடுதல் எண்ணிக்கையில், 'சீட்' கொடுக்கவில்லை என்ற அதிருப்தி இருக்கிறதே?

தி.மு.க.,வில் ஜாதிகள் பார்த்து, 'சீட்' ஒதுக்குவதில்லை என்றாலும் கூட, யாதவர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தொகுதியில், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.


அ.தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட்ட யாதவரான முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை, தி.மு.க., விற்கு அழைத்து வர, யாதவ சமூக பிரமுகர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்களா?

தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால்,

அ.தி.மு.க.,விலிருந்து தானாக வெளியே வந்து புதிய அமைப்பை உருவாக்கி, தி.மு.க.,வுக்கு ஆதரவு தரப் போவதாக ஒரு தகவல் வந்தது. ஆனால், தி.மு.க.,வில் அவர் இணையும் முயற்சி இல்லை. அவரை, நாங்கள் அழைக்கவும் வில்லை. ஆனால், அ.தி.மு.க.,விலிருந்து அவர் வெளியே வருவது மட்டும் உறுதி.


மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட மூன்று இடங்களில் காங்., துணைத் தலைவர் ராகுல் பிரசாரம் செய்த போதும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லையே?

ராகுல் பிரசாரத்தில், ஸ்டாலின் பொதுமக்களை அணுகும் முறையில், காமராஜரை நினைவூட்டுவதாகவும், 'கருணாநிதியை மாநில தலைவராக பார்க்கவில்லை, தேசிய தலைவராக பார்க்கிறேன்' என பாராட்டி பேசியதையும், தி.மு.க., தொண்டர்கள் பெருமையாக கருதுகின்றனர்; அது, உற்சாகத்தையும் தந்துள்ளது. தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்திப்பது

மட்டுமே, நெருக்கத்தின் அடையாளமாக கருத முடியாது.

மதுரையில் ஸ்டாலின், கோவையில் கனிமொழி, சென்னையில் அன்பழகன் ஆகியோரை சந்தித்து பேசினார். அடுத்தமுறை கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக சந்திப்பார்.


'ஜெயலலிதா சிறைக்கு செல்வார்; சசிகலா கட்சியை கைப்பற்றுவார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளாரே?

அவரது பேச்சில், எதையும் ஒதுக்கவும் முடியாது; முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.


ஊழலின் ஊற்றுக் கண்ணே கருணாநிதி தான் என்று, பிரசாரக் கூட்டங்களில் தொடர்ச்சியாக ஜெயலலிதா விமர்சித்து வருகிறாரே?

ஊழலுக்கு தண்டனை பெற்று, சிறைக்கு சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். இப்போதும், அவர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாக இருக்கிறது. வேங்கையிடம் வெட்டுக் கிளியின் பாய்ச்சல் எடுபடாது.


ஜாதி பிரச்னை வரும் என்பதால், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டேன் என, வைகோ சொல்கிறார். அப்படிப்பட்ட பிரச்னைகள் அங்கு உள்ளதா?

'ஆடத் தெரியாத நடன மங்கை, மேடை கோணல் என சொன்னாளாம்' என்ற கதை போல; ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை பழி சொன்னது போல; வெற்றி பெற முடியாத வைகோ, ஜாதி சண்டை என, வீண் பழி சுமத்தியுள்ளார். அவர் போட்டியிடும் எண்ணம் இருந்தால், 234

தொகுதிகளில், ஏதாவது ஒரு தொகுதியில்

போட்டியிடலாம். ஏன், அவர் வசிக்கிற அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடலாமே. போட்டியிட வேண்டாம் என, முடிவு எடுத்தால், ஒரு காரணம் போதும். தன்னையும் ஏமாற்றி, தன்னை நம்பியவர்களையும் ஏமாற்றியுள்ளார் வைகோ. இந்த தேர்தலில் தான், அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். ஆனால், தன்னையே மாற்றிக் கொண்ட ஒரே வேட்பாளர், வைகோ மட்டும் தான்.


கடைசி வரை, கூட்டணிக்கு வராமல் போக்கு காட்டிய விஜயகாந்தை, இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என, ஸ்டாலின், கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாராமே?

ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான், தி.மு.க.,வுக்கு உள்ளது. மனிதர்களுக்கு தலையில் மட்டும்

முடி, கரடிக்கு உடம்பு முழுவதும் முடி என்பது போல, அனைத்து துறைகளிலும், ஊழல் புரிந்துள்ள அ.தி.மு.க., அரசு, மீண்டும் வரக் கூடாது என்பதும் ஒரு நோக்கம்.

எனவே, சிங்கத்திற்கும், யானைக்கும் குறி வைக்கும் வேடன், ஒரு முயல் குட்டியிடம் கவனத்தை திருப்பி, தன் நேரத்தை வீணடிக்க மாட்டான் என, அண்ணாதுரை கூறியது, விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் பொருத்தமாக இருக்கும்.

கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, களத்தில் தெரியாத ஒருவருடன், மல்யுத்த பயிற்சி எப்படி எடுக்க முடியும். மக்கள் நலக் கூட்டணி என்ற ஓட்டை கப்பலுக்கு விஜயகாந்த், வைகோ மாலுமிகள். அதனால், அக்கப்பல் கரை சேராது.


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை முடக்குவதற்கு, கருணாநிதி சதி செய்வதாக, முதல்வர் ஜெயலலிதா கூறுகிறாரே. அப்படிப்பட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படுகிறதா?

தி.மு.க., தேர்தல் அறிக்கையை, அப்படியே நகல் எடுத்து, அதில் சின்ன, சின்ன மாற்றங்களை செய்து, அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார்.


தீவிர எம்.ஜி.ஆரின் விசுவாசியான நீங்கள், தி.மு.க.,வில் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்?

கோடை காலத்தில் கொடைக்கானலில்

இருப்பதை போல, எம்.ஜி.ஆர்., பக்தர்கள் அனைவரும் நிம்மதியாக தி.மு.க.,வில் பணியாற்றி வருகிறோம்.


ஜெயலலிதா - கருணாநிதி கவிதை பாணியில் ஒப்பிடுங்கள்.

கருணாநிதி ஆண்ட காலம் சூரிய (வெளிச்ச) காலம்; ஜெயலலிதா ஆண்ட காலம் இருண்ட காலம்.


அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., - பா.ஜ., - தி.மு.க., என, பல கட்சி மாறி உள்ளீர்கள். கட்சி மாறி வரும் அனுபவம் சொல்லுங்கள்.

அ.தி.மு.க.,வில் இருந்தது அறியாத வயசு. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் இணைத்ததால், அங்கு சென்றேன். அறிவார்ந்த காலத்தில் தி.மு.க.,வில் இணைந்தேன்.


மேடைப் பேச்சில் வெளுத்து வாங்கும் உங்களை, நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் கூட, தி.மு.க., சேர்க்கவில்லையே. ஏன்?

கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற பட்டியலே, தற்போதும் வெளியிடப்பட்டுள்ளது.


நீங்கள் பெரிதும் மதிக்கிற முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு தொகுதி தர, தி.மு.க., மறுத்து விட்டதே?

அவர் கேட்கவில்லை; கேட்டிருந்தால் கிடைத்துஇருக்கும்.


தி.மு.க.,வின் இரண்டாம் நிலை தலைவர்களும் மாவட்ட செயலர்களும், தொண்டர்களை

மதிப்பதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு குறித்து?

தி.மு.க.,வில் 65 மாவட்ட செயலர்களில், புதியவர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். எனவே, மதிப்பு, மரியாதைக்கு அங்கு எந்த பஞ்சமும் இல்லை.


பகுத்தறிவு பாதையில் பயணிப்பதாக சொல்லப்படும் தி.மு.க.,வின் தலைவர் குடும்பத்தினரே, ஆன்மிகத்தில் மூழ்கி திளைக்கின்றனரே?

நாங்கள், திராவிடர் கழகத்தில் இல்லை; கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடிக்க; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பதுதான் தி.மு.க.,


மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள், தி.மு.க., தலைமை மீது உள்ள கோபத்தில், அ.தி.மு.க.,வினருக்கு ஓப்பனாக ஓட்டு கேட்டது குறித்து?

யாருக்கும் ஆதரவு இல்லை என, அழகிரி ஏற்கனவே தெரிவித்து விட்டார்.


சமீபத்தில் படித்ததில் பிடித்தது பற்றி சொல்லுங்கள்?

இலங்கை 'தீவை'த்தான்; 'தீ' வைத்தான் என்ற வரியை வாலி எழுதிய அவதார புருஷன் புத்தகத்தில் படித்தேன்; ரசித்தேன்; வியந்தேன்.


அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'வார் ரூமில்', ஒரே வாராக உள்ளதாமே?

அங்கு போர், வார் எல்லாம் நடக்கவில்லை. சீர்திருத்தம் தான் நடக்கிறது.


கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், காலையில் எழுந்ததும், தன்னை தயார்படுத்திக் கொள்ள வெகு நேரம் ஆகிறதாமே. குறிப்பாக மேக் - அப்புக்கே ஒரு மணி நேரம் தேவைப்படுகிறதாமே?

எள் அளவு, எள்ளின் முனை அளவு கூட உண்மை இல்லை. தங்கத்திற்கு முலாம் பூசுவதற்கு நேரமாகும், தாஜ்மஹாலுக்கு வெள்ளை அடிக்க நேரம் அதிகரிக்கும் என, சொல்வது போல உள்ளது.


கட்சியில் ஆற்காடு வீராசாமி, பொங்கலுார் பழனிச்சாமி, என்.கே.கே.பெரியசாமி போன்றவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனரே?

அவரவர் திறமை, அறிவை கட்சி பயன்படுத்துகிறது. வேறு சில பதவிகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன. மறைந்த என்.வி.என் சோமு மகள் கனிமொழி, மறைந்த அண்ணாமலை பேரன் எழில் அரசனுக்கும், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. எனவே, யாரையும் ஒதுக்கவில்லை.


இளைய தலைமுறை ஓட்டுகளை கவர, தி.மு.க., என்ன திட்டம் வைத்துள்ளது?

தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, அரசு வேலை, தொழிற்சாலைகளில் வேலை போன்ற திட்டங்கள், அவர்களை மையப்படுத்தி தான் தயாரிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க.,வின் பிரசார பலம் போதுமானதாக உள்ளதா?

கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அன்பழகன், சோனியா, ராகுல், இளங்கோவன் என, அனல் பறக்கும் கனல் கக்கும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் - நடிகைகள் தான் இல்லை என்ற குறையை போக்க, அறிவுசார்ந்தவர்களின் பிரசாரம் இருக்கிறது.


கட்சியில், 'சீட்' கிடைக்காத மாவட்ட செயலர்கள் அனைவரும், உள்குத்து வேலையில் ஈடுபட்டுள்ளனராமே?

தார்ப்பாயில் வடிகட்டிய பொய்.


ஸ்டாலினை முழுமையாக இயக்கி வரும் 'ஒன் மேன் குரூப்' குறித்து, உங்கள் கருத்து?

ஸ்டாலினை இயக்க ஸ்டாலினால் தான் முடியும். ஒ.எம்.ஜி.,க்கும் அறிவுரை சொல்லும் ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு.


இந்த முறைதான், தி.மு.க.,வில் முதலில் அறிவித்த வேட்பாளர்களை அதிக அளவில் மாற்றினர். இது கட்சிக்கு ஆரோக்கியமா?

நல்ல கச்சேரியில் சில பாடல்களில், சப்தஸ்வரங்கள் தவறாக விழும். கடலை பொட்டலத்தில் ஒன்றிரண்டு சொத்தைகள் இருக்கத்தான் செய்யும். அதைபோல, ஒன்றிரண்டு வேட்பாளர்களை மாற்றுவது தவறல்ல. அதேசமயம், அ.தி.மு.க.,வில் மாற்றியது போல, 20, 30 பேர் மாற்றம் என்பது, கட்சியை பலவீனப்படுத்தும்.


காங்கிரசுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சரியா?

அதிகம் என்ற வருத்தம் தி.மு.க.,வுக்கும் உண்டு; குறைவு என்ற ஏக்கம்,

காங்கிரசுக்கும் உண்டு.


கருணாநிதி - ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளுக்கு ப.சிதம்பரம், குஷ்பு ஆகியோரை பிரசாரத்துக்கு அழைக்கவில்லையே ஏன்?

யாரையும் பிரசாரத்திற்கு நாங்கள் அழைக்கவில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிக்கேற்ப பிரசாரம் மேற்கொள்கின்றனர்.


தொங்கு சட்டசபை அமைந்தால், ஆட்சி அமைக்க மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., கூட்டணியினரிடம் ஆதரவு கேட்பீர்களா?

மொத்தம், 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெறும். அதற்கு வாய்ப்பே இருக்காது.

முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் ஸ்டாலினா; அன்புமணியா?

200 சதவீதம் ஸ்டாலினுக்கு தான் பொருத்தம். அன்புமணி, கவுண்டமணி, போண்டா மணி மாதிரி காமெடியனாக மாறி விட்டார்.


'திராவிடக் கட்சிகள் ஆட்சியில், தமிழகம் குட்டிச்சுவராகி விட்டது' என, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு விமர்சித்துள்ளாரே?

வேட்டி கட்டிய கருணாநிதி, மூப்பனாரால் பிரதமர்களும், ஜனாதிபதிகளும் உருவாகினர். வட மாநில தலைவர்கள் வியந்தனர். திராவிட கட்சிகள் கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களை, வட மாநிலங்கள் கடைப்பிடித்துள்ளன என்பதே, திராவிட கட்சிகளுக்கு கிடைத்த பெருமை.

எம்.எல்.சி., பதவி; வாரியத் தலைவர் பொறுப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளீர்களா?

கருணாநிதியும், ஸ்டாலினும் ஆட்சி பொறுப்பில் இருந்தால் போதும். தலைமை தரும் வேலையை ஏற்றுக் கொண்டு அதை சிறப்பாக செய்வோம்.


பயோ - டேட்டா

பெயர் : கவிஞர் காசி முத்துமாணிக்கம்

வயது : 58

கல்வித் தகுதி : பி.ஏ.,

கட்சி : தி.மு.க.,

பதவி : வர்த்தகர் அணி செயலர்

சொந்த ஊர் : அறந்தாங்கி, புதுக்கோட்டை


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016