வைகோ பேச்சில் விரக்தியோ, அவநம்பிக்கையோ இல்லை

Tamilnadu Assembly Election News: வைகோ பேச்சில் விரக்தியோ, அவநம்பிக்கையோ இல்லை

'உனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி தேர்ச்சி பெற்றால், நல்ல வாழ்வு உனக்கு கிடைக்கும். இல்லையேல், சிரமப்படுவாய்' என, தேர்வு எழுதும் மாணவனைப் பார்த்து, ஒரு ஆசிரியர் கூறுவதைத் போலவே, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் கருத்து உள்ளது.


'தமிழக மக்களே, அ.தி.மு.க.,- தி.மு.க.,வை வீழ்த்த, இந்தத் தேர்தல் நல்ல வாய்ப்பு. இதைப் பயன்படுத்தத் தவறினால், சிரமப்படுவீர்கள்' என, வைகோ சொல்லி உள்ளார்.


இதை, நேர்மறை சிந்தனையாகவே பார்க்க வேண்டும். மாறாக, தோற்றுவிட்டால், இனிமேல் இந்த கூட்டணி இருக்காது என்பது போல், எதிர்மறை அர்த்தம் கொள்ள வேண்டிய

அவசியமில்லை.


மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்பது, மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நான்கு கட்சிகள் இணைந்து, ஒரு மையப் புள்ளியில் சந்தித்து உருவாக்கப்பட்டது. இதில், பல்வேறு எதிர் கருத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, நீண்ட கால திட்டம் இல்லாமல், ஒன்று சேர்ந்த கட்சிகள், தேர்தலுக்குப் பின் சிதறிவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது.


மக்கள் நலக் கூட்டு இயக்கம் துவங்கிய போதும் சரி, அது கூட்டணியாக உருவெடுத்த போதும் சரி, தேர்தல் மட்டுமே அதன் இலக்கு அல்ல. பொருளாதாரம், சமூக நீதி, மாநில உரிமைகள் மீட்பு, கூட்டணி ஆட்சி மூலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற நான்கு முக்கியப் பிரச்னைகள் தான் எங்கள் இலக்கு. அதற்காகத் தான், களம் இறங்கி உள்ளோம்.


எங்களுக்கான ஓட்டு வங்கி, 20 முதல் 25 சதவீதம் இருக்கிறது. நடுநிலையாளர்களின் ஓட்டு, 35 சதவீதம் உள்ளது. இவர்களில், பெருவாரியான ஓட்டுகள், எங்களின், 25 சதவீதத்துடன் சேரும்போது, எங்களின் வெற்றி நிச்சயம் என கணிக்கிறோம். அந்த நடுநிலையாளர்களை நோக்கியே, வைகோ தன் கருத்தை முன் வைத்துள்ளார்.


இந்தத் தேர்தலில், நடுநிலையாளர்களின் ஓட்டுகள் சிதறும்பட்சத்தில், அவர்கள் மத்தியிலேயே, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று இனி இல்லை என்ற எண்ணம் உருவாகி விடும். அதன்பின், இவ்விரு கட்சி களில் ஒன்றை நோக்கி செல்லத் துவங்கி விடுவர்.


எனவே, அவர்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், 'இந்தத் தேர்தலில் உருவாகி உள்ள மாற்றை விட்டு விடாதீர்கள். அதன்பின், நீங்கள் தான் வருத்தப்பட வேண்டி இருக்கும்' என்ற தொனியில், வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தனிமனித நிந்தனையை முன்வைத்து, மக்கள் நலக் கூட்டணியின் நகர்வு இருக்கிறது. அதனால், வாக்காளர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தலைவருக்கும், அவர்களின் அரசியல் பயணத்தில் பல்வேறு கசப்புகள் இருக்கலாம். ஆனால், அதை மையப்படுத்தி, அரசியல் செய்வதும், ஒரு அணியை கட்டமைப்பதும் இயலாத ஒன்று.


இந்தத் தேர்தல் களத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியைப் பற்றி, வைகோ ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்த கருத்து தவறு என, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக் காட்டியபோது, அதை ஏற்றுக் கொண்டு, உடனே மன்னிப்பு கேட்டார் வைகோ. மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒரு தலைவர் தவறு செய்தால், அதை சுட்டிக் காட்டி திருத்தும் பாங்கு இருக்கிறது.


கூட்டணித் தலைவர்களும், இதுபோன்ற அணுகுமுறையை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கின்றனர். எனவே, தனிமனித எதிர்ப்பை மையமாகக் கொண்டு, மக்கள் நலக் கூட்டணி செல்கிறது என்ற விமர்சனம் சரியல்ல.


அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகிச் சென்று விட்டன. அதனால், தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக் காட்டுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, ஈ.வெ.ரா.,வும், அண்ணாதுரையும் வகுத்த கொள்கைகளை ஏற்கிறோம். அவர்கள் மீது எங்களுக்கு முழுமையான ஏற்பு இருக்கிறது.


ஆனால், அவர்கள் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரு திராவிட கட்சிகளும், அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு, தமிழகத்தை சீரழித்து விட்டன. இதிலிருந்து, தமிழகம் விடுபட வேண்டும் என எண்ணுகிறோம். இந்த அடிப்படையில் தான், இரு கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கிறோம்.

.

எனவே இந்த வாய்ப்பை, தமிழக வாக்காளர்கள் நழுவவிடக் கூடாது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்கிறோம். தேர்தல் பிரசாரத்திலும் முன் வைக்கிறோம். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், வைகோவும் இந்த வேண்டுகோளை தான் சொல்லி உள்ளார். அவரது பேச்சில் விரக்தியோ, அவநம்பிக்கையோ இல்லை.


அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரு கட்சியில், ஏதாவது ஒன்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதை மட்டுமே, வைகோ வேண்டுகோளின் சாராம்சம்.

அருணன்

எழுத்தாளர், மார்க்சிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016