முதல்வரையும் காலில் விழ வைத்தவர் ஜெயலலிதா - சீறி பாய்கிறார் செல்லகுமார்

Tamilnadu Assembly Election News: முதல்வரையும் காலில் விழ வைத்தவர் ஜெயலலிதா - சீறி பாய்கிறார் செல்லகுமார்

''ஒரு முதல்வர், தெருவில் நின்று ஜெயலலிதா காலில் விழுந்து கும்பிடுவதை,

நாட்டு மக்கள் பார்த்தனர்,'' என, அகில இந்திய காங்கிரஸ் செயலர் டாக்டர் செல்லகுமார் ஆவேசமாக கூறினார்.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


கடந்த சில மாதங்களுக்கு முன், சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், 'யாரும் செயல்படவில்லை' என்றும்; 'கோட்டா சிஸ்டத்தில் பதவியை பெற்றுள்ளனர்' என்றும் பேசினீர்கள். அப்போது ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, நீங்கள் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி விட்டீர்களே?கட்சி விரோத நடவடிக்கையில், ஒரு போதும் ஈடுபட்டதில்லை. இது, அனைத்து தலைவர்களின் மனசாட்சிக்கும் தெரியும். கட்சி நலனுக்காக தான், செயற்குழுவில் பேசினேன். என் தனிப்பட்ட

நலனுக்காக பேசவில்லை.

கட்சி சார்பில், மாநில அரசை கண்டித்து, நாகப்பட்டினத்தில் நடந்த போராட்டம், விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

கர்நாடகம், கோவா மாநிலங்களின் மேலிட பொறுப்பாளராக பணியாற்றுகிறேன். என், 32 கால அரசியல் அனுபவத்தால், அம்மாநில பிரச்னைகளை, திறம்பட தீர்த்து வைக்கிறேன். கோவாவில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோது, இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினேன். வேட்டி கட்டிய தமிழனின் அணுகுமுறையால், காங்கிரஸ் கட்சிக்கு வர இருந்த ஆபத்து தடுக்க முடிந்தது என, கோவா சபாநாயகர், என்னை பாராட்டி பேசி, சட்டசபையில் பதிவு செய்தார்.அதேபோல, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், அம்மாநில கட்சி வளர்ச்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். எனவே, கட்சி நடவடிக்கைகளில் இருந்து நான் ஒதுங்கிஇருக்கவில்லை.


அதன்பின், சிதம்பரம் அணியோடு சேர்ந்து, மாநிலத் தலைமையை எதிர்த்ததால் தான், தேர்தல் பணிக் குழுவில் உங்களுக்குஇடமில்லையா?

எட்டு பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில், நான் இடம் பெறவில்லை. ஆனால், 27 பேர் கொண்ட தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவில், நான் இடம் பெற்றிருந்தேன்.


மாநிலத் தலைமையோடு, உங்களுக்கு அப்படி என்ன தான் பிரச்னை?

தனிப்பட்ட முறையில், எனக்கு யாரிடமும், எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. என்னை அழைக்கிற கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வேன்.


திறமையானவர்களை மாநிலத் தலைவர்களாக, டில்லி தலைமை நியமிப்பதில்லை என,

கூறிய பின்தான், உங்களுக்கும், இளங்கோவனுக்கும் பிரச்னை ஏற்பட்டதாமே?

அப்படி நான் எங்கும் கூறவில்லை. பிரச்னைக்கு காரணம் தேடுவது போல் தெரிகிறது.


இந்த முறை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டீர்களா?

இல்லை.


உங்கள் ஆதரவாளர்களுக்கும், 'சீட்' மறுக்கப்பட்டு விட்டதே?

கட்சி மேலிடம் எடுத்த முடிவை, நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.


மாநிலத் தலைமையோடு, கோஷ்டி கோஷ்டியாக மோதல் போக்கை கடைபிடித்தால், மாநிலத்தில் கட்சியை எப்படித்தான் வளர்க்க முடியும்?

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பணியாற்றும் தலைவர்கள் அனைவரும்,

காங்கிரஸ் தலைவர் சோனியா எடுக்கும் முடிவுக்கு, கட்டுப்பட வேண்டும். மாநில அளவில்

திறமையாக பணியாற்றுபவர்களை, மூத்த தலைவர்கள் அரவணைத்து சென்றால் தான், கட்சியின் லட்சியத்தை அடைய முடியும்.

எல்லாரையும் விலக்கி விட்டு, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி, கட்சி நடத்த விரும்பினால், கட்சியை வளர்க்க முடியாது. தனி மரம் ஒரு போதும் தோப்பாகாது. இது, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள, இலவச அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளதா?

தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், பல நாட்கள் கழித்து, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்டதால், பெரிய அளவில் மக்களிடம்

முக்கியத்துவம் பெறவில்லை.


அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நிறைவேற்ற முடியுமா?

சாத்தியம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், சாத்தியப்பட முயற்சித்தால், தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலையும்.


ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சி குறித்து, கடுமையான விமர்சனங்கள் நாலா புறமும்

வைக்கப்படுகின்றன. ஆனால், உங்களைப் போன்ற, ஒரு சில காங்கிரசாரிடம் இருந்து மட்டும், எந்த விமர்சனமும் இல்லையே... ஏன்?

த.மா.கா., பிரிந்தபோது, அனைத்து மாவட்டங்களுக்கும் இளங்கோவனுடன், நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அ.தி.மு.க., ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறேன்.


நீங்கள் காங்கிரசில் இருந்தாலும், ஜெயலலிதாவின் அனுதாபி என்கின்றனரே?

இதை ஜெயலலிதாவே ஏற்றுக் கொள்ள மாட்டார். அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழலை, ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக சட்டசபையில் வாதிட்டு இருக்கிறேன். வீட்டு வசதி வாரியம் தொடர்பான பிரச்னையை எழுப்பிய போது, அ.தி.மு.க., ஆட்சியில் தாமரைக்கனியால் தாக்கப்பட்டதில் நானும் ஒருவன். ஒரு சாராரை ஆதரித்து, நான் செயல்படவில்லை. சட்டசபையில் காங்கிரஸ்காரனாகவே செயல்பட்டிருக்கிறேன்.


அரசியலில் மூப்பனாரால் உருவாக்கப்பட்ட நீங்கள், வாசனோடு ஏன் செல்லவில்லை?

மூப்பனாருடன் இணைந்து பணியாற்றிஉள்ளேன். அவரது தலைமையில், த.மா.கா.,

உருவாவதற்கு, என் உழைப்பும் அடித்தளமாக அமைந்தது. அதற்கு பரிசாகத்தான், தி.மு.க., -

த.மா.கா., கூட்டணியின், முதல் பொதுக்கூட்டத்தை, அப்போது, நான் எம்.எல்.ஏ.,வாக போட்டியிட்ட தி.நகரில் நடத்த, கருணாநிதியே, மூப்பனாரிடம் சிபாரிசு செய்தார்.

அரசியலில் வேகமாக நான் இருந்தபோது, வாசன் அரசியல் களத்தில் இல்லை. மூப்பனார் மறைவுக்கு பின், த.மா.கா., காங்கிரசுடன் இணைந்த பின், சோனியா, ராகுலை தான் நான் தலைவராக ஏற்றுக் கொண்டேன்.


மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருக்கும் த.மா.கா.,வின் நிலை, தேர்தலுக்குப் பின் என்ன?

வாசன் தேர்தல் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்த பின், கட்சிக்காரர்களை தேடிப் பார்க்க

வேண்டிய நிலை வந்து விடும். அவர் மட்டும் தான் இருப்பார் என்பது, அவருக்கே தெரியும்.


காமராஜர், எம்.ஜி.ஆர்., வரிசையில், ஸ்டாலினையும் ஒப்பிட்டு ராகுல் பேசியதை,

ஒரு காங்கிரஸ்காரராக எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களோடு, மக்களாக இரண்டற கலந்து, மக்கள் நலப் பணிகளில் அக்கறையும், ஆர்வமும்

காட்டுபவர்களை, ராகுல் பாராட்டி பேசியதை வரவேற்கிறேன்.


காங்கிரசும், தி.மு.க.,வும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என, ஸ்டாலின் இப்போது கூறுகிறார். ஆனால், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், கூடா நட்பு கேடாய் முடியும் என, விமர்சித்தனரே?

நாட்டின் நலன், மதச்சார்பற்ற தன்மையில் எந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் சமரசப்படுத்தி

கொள்வது கிடையாது. சில நேரங்களில், மாற்றுக் கருத்துக்கள் வரும். அப்படிப்பட்ட சூழ்நிலை,

அரசியல் நிர்பந்தங்களால் சொல்லப்படுகிற சில வார்த்தைகளை பெரிதுபடுத்த தேவையில்லை.


டாக்டர் செல்லகுமார், மருத்துவம் பார்ப்பதுண்டா?

ஒரே நேரத்தில் இரண்டு படகில் பயணம் செல்ல முடியாது. அரசியல் பயணத்தை துவக்கிய பின், மக்கள் பணிக்கு முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். மருத்துவம் பார்க்க நேரமில்லை.


மணிப்பூர் மன்னர் குடும்பத்து மருமகன் நீங்கள். அதனால் தான், காங்கிரசில் இன்னமும் டில்லியில் செல்வாக்கோடு இருப்பதாக சொல்கின்றனரே?

மாணவர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தபோது, பம்பரமாக சுழன்று பணியாற்றினேன். கிராமம், கிராமமாக சுற்றுப் பயணம் சென்று கட்சியை வளர்த்தேன். என்

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பதவிகளை பெற்றேன். மற்றவரின் சிபாரிசில் எந்த

அடையாளத்தையும் நான் பெற விரும்பியதில்லை.


தமிழக காங்கிரசின் அத்தனை கோஷ்டிகளையும் கடந்து, இளங்கோவன் தன் ஆதரவாளர்களுக்கு, கூடுதல் எண்ணிக்கையில், 'சீட்' வாங்கியதை, எப்படி பார்க்கிறீர்கள்?

கருத்து சொல்ல விரும்பவில்லை.


இனி இளங்கோவனோடு மோதி, வெற்றி கொள்ள முடியாது என, அவரிடமே, கோஷ்டி தலைவர்கள் சரணடைந்து விட்டது குறித்து, உங்கள் கருத்து?

எல்லோரும் சேர்ந்து தேர் இழுத்தால் தான் நிலைக்கு கொண்டு வர முடியும். காங்கிரஸ்

கட்சியை பலமான கட்சியாக மாற்ற வேண்டும். அதற்கு போட்டி, பொறாமை, ஈகோவுக்கு எல்லாம் இடமில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என, சொன்னவர்கள் எல்லாரும் எப்படி எல்லாம் மாறினார்கள்; மாற்றப்பட்டார்கள் என்பதை பலருக்கு காலம் உணர்த்தியுள்ளது. எனவே, வெற்றி பெற்று விட்டோம் என, மமதையில் ஆடவும் தேவையில்லை; தோல்வி கண்டு விட்டோமே என துவண்டு படுக்கவும் தேவையில்லை.


தமிழகம் முழுவதும், இளைஞர்களை இணைத்து, பெரும் படையை உங்கள் பின்னால்

வைத்திருந்தீர்கள். இப்போது, அப்படிப்பட்டவர்கள் சிதம்பரம் மகன் கார்த்தி பின்னால், அணிவகுத்து சென்று விட்டனரே?

அவரும் ஒரு காங்கிரஸ்காரர் தான். எந்த தலைவர்களாக இருந்தாலும் சரி, தற்போது அவர்களிடம் இருக்கும், 45 வயதுக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும், என்னால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்; வளர்க்கப்பட்டவர்கள். என்னால் உருவாக்கப்பட்டவர்களை வைத்து தான், அரசியல் நடத்த முடியும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால், அது எனக்கு பெருமை தானே.


கட்சியில் நடிகை குஷ்பு, நக்மா போன்ற நடிகைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, உங்களைப் போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்கின்றனரே?

மற்றவர்கள் அப்படி நினைத்தால், நினைத்து விட்டு போகட்டுமே.


சோனியா - ஜெயலலிதா. இருவரின் நிர்வாகம் பற்றி, உங்கள் பார்வை?

தனக்கு தேடி வந்த பிரதமர் பதவியை வேண்டாம் என மறுத்து விட்டு, மன்மோகன் சிங்கை

பிரதமராக்கி அழகு பார்த்தவர் சோனியா. பத்து ஆண்டு காலம், தன்னால் அடையாளம்

காட்டப்பட்ட மன்மோகன் சிங்கிடம் கருத்து சொல்ல வேண்டும் என்றால், அவர் வீடு தேடி சென்று, கருத்துக்களை சொன்னவர் சோனியா.


ஆனால் ஜெயலலிதாவோ, முதல்வர் பதவியில் இருந்து விலகும்போது, அவரால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர், தெருவில் நின்று காலில் விழுந்து கும்பிடுவதை, நாட்டு மக்கள் பார்த்தனர். இருவரின் வேறுபாடு, மக்களுக்கு நன்றாக தெரியும்.


நல்ல பேச்சாளர் நீங்கள். ஆனால், கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உங்கள் பெயரை காணோமே?

நட்சத்திர பேச்சாளர் என அடையாளம் காட்டினால் தான், எனக்கு பேச்சு வரும் என்றெல்லாம்

இல்லை. ஒரு சாமானியனாக, அடிமட்ட தொண்டனாக இருந்து பேசுவதை தான் விரும்புகிறேன். நான் எந்த அங்கீகாரமும் கேட்டதில்லை. அதிகமான மேடைகளையும், தொண்டர்களையும் சந்தித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு.

அதிகாலை, 5:00 மணிக்கெல்லாம் மேடையில் பேசியவன். அதனால், எனக்கு மேடை அரிப்பு இல்லை. எங்கள் கட்சியின் சில தலைவர்களை விட, மற்ற காட்சிகளின் தலைவர்கள், என்னை பாராட்டி பேசியதுண்டு.


மத்திய அமைச்சர்கள், திடுமென தமிழகத்துக்கு வந்து, அ.தி.மு.க., ஆட்சி முறைகேடுகள் குறித்து, கடுமையாக விமர்சிக்கின்றனரே?

தமிழகத்தின் முறைகேடுகள், இப்போது தான் அவர்களின் கண்களுக்கு தெரிந்ததா?


தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று நாங்கள்தான் என, தொடர்ச்சியாக தமிழிசை சவுந்தரராஜன்

கூறி வருகிறாரே?

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.


தனது, 93 வயதிலும், கருணாநிதி பொய் சொல்கிறார் என, விஜயகாந்த் பேசி வருவது சரியா?

கருத்து மோதல் இருக்கலாம். நாகரிகமற்ற, பண்பாடற்ற மோதல் இருக்கக் கூடாது. கருத்தை ஏற்கவில்லை என்பதால், வன்முறை மூலம் திணிக்கும் கலாச்சாரம் ஒழிய வேண்டும்.


பணமில்லாமல் தேர்தலை, இனி சந்திக்க வாய்ப்பில்லையா?

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 500 ரூபாய், 1,000 ரூபாயை வாக்காளர்கள் வாங்குவதால், அவர்கள் வாழ்வில், எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்ற விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும். தற்போது ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வு, சமூக வலை தளங்கள் வாயிலாக, இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்தலில், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு, மக்கள் பாடம் புகட்டும் வகையில் தோல்வியை அளித்தால், அடுத்த தேர்தலில், பணம் கொடுப்பதை கட்சிகளும் நிறுத்தி விடும்.


எல்லா தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனரே?

அதிகாரவர்க்கம், மனசாட்சியோடு மக்கள் தான் எஜமானர்கள் என எண்ணி செயல்படும் போது தான், இதுபோன்ற குற்றச்சாட்டு ஏற்படாத சூழ்நிலை உருவாகும்.


தமிழகத்தில் புதிய வாக்காளர்களாகி இருக்கும், 1.3 கோடி பேரின் ஓட்டுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்?

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.


சந்தோஷம் - துக்கம் எப்படி இருப்பீர்கள்?

இரவும், பகலும் மாறி, மாறி வருவதை, நம் மனம் ஏற்றுக் கொள்வது போல, ஏற்றுக் கொள்ள வேண்டும்.


பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் காங்கிரசில் வந்தது குறித்து?

அவரும் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர். த.மா.கா.,விலிருந்து யார் வந்தாலும் வரவேற்போம்.


பயோ - டேட்டா

பெயர் : டாக்டர் எஸ்.செல்லகுமார்

வயது : 53

கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்.,

கட்சி : காங்கிரஸ்

பதவி : அகில இந்திய காங்கிரஸ் செயலர்,

(கர்நாடக, கோவா பொறுப்பு)

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016