தன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை!

Tamilnadu Assembly Election News: தன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை!

யதார்த்த அரசியல் களத்தை விட்டு, தனி மனித விருப்பு வெறுப்புகளுக்காக, அரசியல் காய்களை நகர்த்தியதால், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற திட்டம் எடுபடாமல் போகிறது. இதன் வெளிப்பாடே, ம.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் மன ஓட்டமாக உள்ளது.


இணையதளம் ஒன்றுக்கு, வைகோ அளித்த பேட்டியில், 'தி.மு.க., - அ.தி.மு.க.,வை எதிர்த்து, ஒருவேளை எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், வரும் காலங்களில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு போவது வழக்கமாகி விடும். அதனால், என் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான். ஈ.வெ.ரா., போன்று கட்சி நடத்த வேண்டியதாகி விடும்' என கூறி உள்ளார்.

இதன்மூலம், தேர்தலுக்குப் பின், மக்கள் நலக் கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தை, வைகோவே எழுப்பி உள்ளார். தன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்கு, வைகோவின் கருத்து ஒரு உதாரணம்.


மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தபோது, கட்சியின் ஒன்றிய செயலர் போல, பட்டாசு வெடித்து கொண்டாடிய மன நிலையில், வைகோ இருந்தார். இந்த அணி சேர்க்கை மூலம், தி.மு.க., வெற்றி பெற முடியாது என்ற எண்ணம் மட்டுமே, வைகோவிடம் மேலோங்கி இருந்தது. இது, கட்சித் தலைவருக்கான மனோநிலையாக இருக்க முடியாது.


'இந்தத் தேர்தலில் தோற்றாலும், திராவிட கட்சிகளை வேர் அறுக்கும் வரை, எங்களது அரசியல் பயணம் ஓயாது' என்ற திடமான மன நிலையில், அவர் இல்லை என்பதை, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. தமிழகத்தில், வைகோ மட்டும் அல்ல, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சில தலைவர்கள், கருணாநிதி எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, அரசியலை சந்திக்கின்றனர். இது, ஆரோக்கியமான அரசியலுக்கு, அவர்களை அழைத்து செல்லவில்லை.


மக்கள் நலக் கூட்டணியில், கம்யூனிஸ்டுகள் அவர்களின் தேசியக் குழு தீர்மானத்தின் படி, இடதுசாரி அணியை உருவாக்குகிறோம் என்றனர். இதற்காக, திராவிட கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ., - பா.ம.க., அல்லாத கட்சிகளுடன் கூட்டணி எனக் கூறி, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர்.

விடுதலை சிறுத்தைகளைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை மட்டுமே முன்னிறுத்தினர். அவர்களின் இந்த கோஷத்தை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஏற்கவில்லை என்பதால், மக்கள் நல கூட்டணியில் தொடர்கின்றனர். வாசனின் த.மா.கா.,வை பொறுத்தவரை, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட, அ.தி.மு.க., வாய்ப்பு அளித்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.


அ.தி.மு.க.,வைத் தவிர, அனைத்து அரசியல் கட்சிகளுடனும், தே.மு.தி.க., தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடத்தியது. கடைசியில், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தது.

இந்நிலையில், தொடக்கம் முதலே, இந்த கூட்டணியை மாற்று அரசியல் என்ற பாதையை நோக்கி, வைகோ நகர்த்தவில்லை. மாறாக, தனிமனித நிந்தனைகளையும், ஒரு கட்சி எதிர்ப்பு நிலையையுமே கையாண்டார். இது, எதிர்பார்த்த பலனை, மக்கள் நலக் கூட்டணிக்கு, தேர்தல் களத்தில் அளிக்கவில்லை.


அதனால் ஏற்பட்ட விரக்தியில்; ஆதங்கத்தில், 'இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், ஈ.வெ.ரா., போல கட்சி நடத்த வேண்டி வரும்' என்கிறார். தி.மு.க.,வில் உருவான ஒரு கட்சித் தலைவராகத் தான், வைகோ இருக்கிறார். அவரால், ஈ.வெ.ரா., போல கட்சி நடத்துவது என்றைக்கும் சாத்தியமில்லை. எனவே, அரசியலின் கடைசி கட்டமாக, வைகோ கூறும் இந்த சிந்தனையைக் கூட, ஏற்றுக் கொள்ள முடியாது.தனி மனித எதிர்ப்பு அரசியலை, யதார்த்த தேர்தல் களத்தோடு இணைக்க, வைகோ மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும், கடந்த காலங்களில் வெற்றி பெறவில்லை.


ம.தி.மு.க., துவங்கும்போது, அவர் எந்த மனநிலையில் இருந்தாரோ, அதுதான் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் வெளிப்படுகிறது. 1996க்குப் பின் நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலின்போதும், கூட்டணி மாறுவது, புதிய கூட்டணியை உருவாக்குவது என, அவர் செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தல் அணுகுமுறை, அவருக்கு பெரும் பின்னடைவைத் தான், இதுவரை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தேர்தலிலும், அது எதிரொலிக்கும் என, வைகோவின் ஆதங்கமே வெளிப்படுத்திவிட்டது.


மாற்று அரசியலுக்கான நீண்டகால, நிலையான கொள்கைகள் இல்லாமல், மாற்று அணியை உருவாக்கியதே, தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணி சந்தித்து வரும் குழப்பமான நிலைக்கு முழுமுதல் காரணம்.


சுபகுணராஜன்

அரசியல் விமர்சகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016