முதல்வராக இருந்ததை பிரதமாரதும் மறந்துவிட்டாரா?

Tamilnadu Assembly Election News: முதல்வராக இருந்ததை பிரதமாரதும் மறந்துவிட்டாரா?

மாநில முதல்வராக இருந்தபோது, 'மாநிலத்துக்கான அதிகாரத்தை பறிக்காதீர்கள்; கூடுதல் அதிகாரத்தை அளியுங்கள்; அதிகாரத்தை பரவலாக்கினால் தான், இந்தியா வளரும்; அதிகாரம், ஒரே இடத்தில் குவிந்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது' என, குரல் கொடுத்தவர் நரேந்திர மோடி.


இப்போது, பிரதமர் ஆகிவிட்டார். மத்திய அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தை ருசிக்க நினைக்கிறாரே தவிர, மாநில முதல்வராக இருந்தபோது முன்வைத்த கோரிக்கையை மறந்து விட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, மத்திய அரசுக்கு, 76 அதிகாரங்களும், மாநில அரசுக்கு, 66 அதிகாரங்களும் இருந்தன. சுதந்திரம் அடைந்த இந்த, 69 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுள்ள அதிகாரத்தின் எண்ணிக்கை, 144 ஆக உயர்ந்து விட்டது. மாநில அரசின் அதிகாரம், 16 என சுருங்கி விட்டது.


கனிமவளம் முதல் சமையல் எரிவாயு விற்பனை வரை, அனைத்து வருமானத்தையும் பெறும் நிலையில், மத்திய அரசு இருக்கிறது. மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு, சில வரி வருவாயை பெறுகிறது. இந்த வருவாய், மாநிலத்தின் பட்ஜெட்டில் மிகச் சொற்பம். எனவே, மத்திய அரசை எதிர்பார்த்து இருக்க வேண்டி உள்ளது.


மத்திய அரசு, ஒரு பெரியண்ணன் மனப்பான்மையில், விரும்பிக் கொடுப்பதை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள வேண்டும். தன் விருப்பம் மட்டுமே முக்கியம் என நினைக்கிறது. இதனால், மாநில அரசுகளுக்கு பிச்சை போடும் மனப்போக்கில், மத்திய ஆட்சி யில் இருப்பவர்கள் நடந்து கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி வந்து விட்டால், உலகம் முழுவதும் ஏற்பட்ட தாக்கம் இது என, சர்வதேசத்தை கைகாட்டுகிறது மத்திய அரசு.


விலைவாசி உயர்ந்து விட்டது. இதற்கு, மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கை தான் காரணம் என சொன்னால், 'நீ வசூலிக்கும் வரியை விட்டுக் கொடு' என, மாநில அரசைப் பார்த்து சொல்கிறது மத்திய அரசு. மாநில அரசின் சொற்ப வரி வருவாயையும் விட்டுக் கொடுத்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ன செய்ய முடியும்?


இந்த மனநிலையில் தான் தமிழக அரசை, பா.ஜ., விமர்சிக்கிறது. தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு என, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறது. காங்கிரஸ் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பியது. அவர்களுக்கு, ஆதாயம் செய்யவே ஆட்சி நடத்தியது என, பா.ஜ., குற்றம்சாட்டியது. இப்போது என்ன நடக்கிறது... பா.ஜ.,வும் கார்ப்பரேட் அரசாகத் தான் செயல்படுகிறது.


மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட உத்தரகண்ட் மாநில அரசை கலைத்தது. அதன் பின், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நம்பிக்கை தீர்மானத்துக்கு உத்தரவிட்டது. இதன் மூலம், மத்திய அரசின் அதிகாரத்தை, பா.ஜ., எப்படி துஷ்பிரயோகம் செய்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.


விவசாயி சேற்றில் கை வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். நாட்டின் மக்கள்தொகையில், பெரும்பகுதி மக்கள், விவசாயத்தை நம்பி உள்ளனர். போதிய வருமானம் இன்றி, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர் விவசாயிகள். இவர்களை காப்பாற்ற, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை, 72,000 கோடி ரூபாய்.ஆனால், தனி மனிதன் அதானி நிறுவனத்துக்கு, வங்கிகள் கொடுத்த கடன் தொகை, 72,000 கோடி ரூபாய். மக்கள்தொகையில், 60 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கும், தனிமனித அதானிக்கும் ஒரே சதவீதத்தில் நிதி ஒதுக்குவது தான், ஏழை, எளிய மக்களுக்கான பா.ஜ., ஆட்சியா?

நாட்டின் மொத்த வளத்தில், 59 சதவீதம், ஒரு சதவீத மக்களிடம் உள்ளது. இவர்களை பாதுகாக்கவும், இவர்கள் தொடர்ந்து வளம் பெறவுமே, பா.ஜ., அரசு செயல்படுகிறது. ஆனால், இவர்கள் அ.தி.மு.க., அரசைப் பார்த்து, நிர்வாகச் சீர்கேடு என சொல்கின்றனர்.


மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி, 'விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறையுங்கள்' எனச் சொன்னால், 'மாநில அரசு விதிக்கும் வரியை குறையுங்கள்' என, லாவணி பாடும் வேலையை, பா.ஜ.,வினர் செய்வது, மக்கள் மீது இவர்களுக்கு உள்ள அக்கறையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.


மத்திய அரசின், 'உதய்' திட்டத்தால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை; தனியார் மின் நிறுவனங்களே இத்திட்டத்தால் பயன்பெறும் என, முழுமையான விளக்கத்தை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த பின்னும், 'உதய்' திட்டம் குறித்து, பா.ஜ., தவறான பிரசாரத்தை செய்வது, அவர்களின் உள்நோக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.


பகல், இரவு என பொழுதுகள் மாறியபடியே இருக்கும். இப்போது இருக்கும் மத்திய அரசு, நீண்ட நாளுக்கு மத்தியில் அதிகாரத்தில் இருக்க முடியாது.பா.ஜ., பல மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில முதல்வர்கள் எல்லாம், தங்கள் கட்சி மத்தி யில் ஆட்சியில் இருக்கிறது என, வாயை மூடிக் கிடக்கலாம். உண்மையில், அம்மாநிலங்களின் பொருளாதார நிலை என்ன என்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால், பா.ஜ., கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.


சமரசம்தலைமைக் கழக பேச்சாளர், அ.தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016